942.

     ஒற்றியூர் அமரும் ஒளிகெழு மணியே
          உன்அடி உள்கிநின் றேத்தேன்
     முற்றியூர் மலினக் குழிஇருள் மடவார்
          முலைஎனும் மலநிறைக் குவையைச்
     சுற்றிஊர் நாயின் சுழன்றனன் வறிதே
          சுகம்எனச் சூழ்ந்தழி உடலைப்
     பற்றியூர் நகைக்கத் திரிதரு கின்றேன்
          பாவியேன் உய்திறம் அரிதே.

உரை:

     ஒற்றியூர்க்கண் எழுந்தருளும் ஒளி பொருந்திய மணியே, உன்னுடைய திருவடியை நினைந்து பரவாமல், நிறைந்து வழியும் மலினமுடைய இருட்குழியாகிய நிதம்பத்தையுடைய மகளிருடைய முலையென்ற மலம் நிறைவாகிய தசைக்குவையை ஊர் நாயைப்போற் சுற்றி வீணே கழன்று, அதுவே சுகம் எனக் கருதி, அழிந்துபடும் உடலைப் பொருளாகப் பற்றி ஊரவர் கண்டு நகைக்குமாறு திரிகின்றேன்; அத்தகைய எனக்கு உய்தி கிடைப்பது அரிது, காண், எ.று.

     ஒளிகெழு மணி - ஞான வொளி திகழும் மணி, சிவந்த மேனியும் ஒளியும் கொண்டு மாணிக்க மணி போறலின், சிவபெருமானை, “ஒளி கெழு மணி” என உவந்துரைக்கின்றார். செய்தற்குரியது சிவனது திருவடியை நினைந்து ஏத்துதலாக, அது செய்யாமல் மகளிர் குழுவை நாடியலைந்தேன் என்பார், “மடவார் முலையெனும் மலநிறைக் குவையைச் சூழ்ந்து சுழன்றனன்” எனச் சொல்லுகின்றார். திங்கள் தோறும் மாதவிடாய் என்னும் குருதியொழுக்கும் நிதம்பத்தை யுடையராதலின், “முற்றியூர் மலினக்குழி யிருள் மடவார்” என்றும், மலநிறைக் குவையை நோக்கிச் சுற்றித்திரியும் ஊர் நாயைப் போல, மகளிர் முலைக்குவையை விரும்பியவர்களைத் தொடர்ந்து சூழ்ந்து அலைந்தேன் என்பாராய் “மலநிறைக் குவையைச் சுற்றி ஊர்நாயின் சுழன்றனன்” என்றும், அச் செயலின் புன்மையை வெறுத்து, “வறிதே சுழன்றனன்” என்றும் இசைக்கின்றார். மலினம் - ஈண்டு மாதவிடாய் ஆகிய அழுக்கு. அம்மகளிரது உடம்பொடு கூடுதலாற் பிறக்கும் காமவின்பத்தைப் பெரிய சுகம் என உள் பற்றித் திரிவதுகண்டு ஊரவர் நகைப்பதை யெடுத்துரைத்து, இச் செயல் புரிந்தொழுகும் எனக்கு உய்தி எய்துவது அரிது என்பாராய், “சுகமெனச் சூழ்ந்து அழியுடலைப் பற்றி ஊர் நகைக்கத் திரிதருகின்றேன் பாவியேன் உய்திறம் அரிது” என வுரைக்கின்றார். சுகம் - மகளிரைக் கூடலால் எய்தும் இன்பம். மகளிரையே விழைந்து திரிவது ஊரவர் அறியப் பரந்து எள்ளற்பாட்டை உண்டு பண்ணுதலால் “ஊர் நகைக்கத் திரிதருகின்றேன்” எனவும், அது பாவச் செயலாதல் பற்றிப் “பாவியேன்” எனவும் கூறுகின்றார்.

     இதனால், சிவபெருமான் திருவடியைப் பணிந்து ஏத்தாமல் மகளிரை விழைந்து ஊர் நகைக்கத் திரியுமவர்க்கு உய்தியில்லை என்று உரைத்தவாறாம்.

     (2)