943. அரியது நினது திருஅருள் ஒன்றே
அவ்வருள் அடைதலே எவைக்கும்
பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப்
பேய்களை ஆயிரம் கூட்டிச்
சரிஎனச் சொலினும் போதுறா மடமைத்
தையலார் மையலில் அழுந்திப்
பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப்
பெருமநின் அருளெனக் குண்டே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் பெருமானே, நின்னுடைய திருவருள் ஒன்றே அரிய பொருள்; அதனை எய்துவதே பெறப்படும் பொருள்கள் எல்லாவற்றிலும் பெரியதொரு பேறு என்பதை உணராமல், திருந்தாத் தன்மையுடைய ஆயிரம் பேய்களை ஒன்று சேர்த்து உருவாக்கின் ஒரு பெண்ணுக்கு நிகராமெனச் சொல்லின் அதுவும் நிரம்பாது என்னும் அளவு மடமைமிக்க மகளிரின் மயக்கத்தில் மூழ்கி விருப்புற்று ஏழையாகிய யான் அலைந்து வருந்தினேன்; இத்தகைய எனக்கு நின்னுடைய அருள் கிடைக்குமோ? அறியேன். எ.று.
திருவருள் ஒன்றே உலகிற் பெறற்கரியது; பிறிது யாதும் இல்லை என்ற இக் கருத்தை, “அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும் பொருளிற் றலையிலது போல்” (31) என்று திருவருட் பயன் உரைப்பது காண்க. எவைக்கும், சாரியை பெறாது முடிந்தது. உணர்ந்திலேன், முற்றெச்சம். முருட்டுப் பேய் - திருத்தலாகாவாறு கோணிய பேய். போதுறா மடமை - நிகர்க்குமளவு நிரம்பாத அறியாமை. தையலார் - எப்போதும் ஒப்பனையோடிருப்பவர். மையல் - காம மயக்கம். திண்ணிய அறிவில்லாமையால் வேட்கை மிக்குத் திரிந்தேன் என்பார், “ஏழைநான் பிரியமுற்று அலைந்தேன்” என்று கூறுகின்றார். வேண்டுவார்களை ஆட்கொண்டபின் விடுவதில்லையாதலால் இறைவன் ஆண்டருளுதற்கு முன் கண்ணாற் கண்டல்லது அருள் செய்வது கிடையாதென்பதனால், என்னைக் காணில் திருவருள் செய்யாய் என்பார், “நின் அருள் எனக்கு உண்டே” என்று இயம்புகின்றார். ஏகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது. “கண்டலா தருளுமில்லை கலந்த பின் பிரிவதில்லை” (ஐயாறு) என்று திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க.
இதனால், தையலார் மையலில் அழுந்தி அலைவார்க்கு அரிதாகிய திருவருள் எய்தாது என்று விளம்பியவாறாம். (3)
|