944. பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில்
பேதையர் புழுமலப் பிலமாம்
கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக்
கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித்
தலத்தமர் தனிமுதல் பொருளே
துருமவான் அமுதே அடியனேன் தன்னைச்
சோதியா தருள்வதுன் பரமே.
உரை: அறமாகிய கடலே, அகன்ற மருத வயல்களைக் கொண்ட திருவொற்றியூர்க்கண் வீற்றிருக்கும் தனிமுதற் கடவுளே, தேவவுலகத் தமுதமே, பெருமானே, நின்பாற் பெறலாகும் திருவருள் வாழ்வையன்றி இவ்வுலகில் பேதை மகளிரது புழுவையுடைய மலம் நிறைந்த பிலத்திற் கூடி நடத்தும் கருமவாழ்வைச் சிறிதும் வேண்டுகின்றேனில்லை; அதுவே யன்றி வானுலகத்துத் தேவர்கள் வாழ்வையும் விழைகின்றேனில்லை, ஆதலால், அடியேனைச் சோதனைக்குட்படுத்தாது அருள் செய்வது உன் பொறுப்பாகும். எ. று.
அறத்தை, வடநூலார் தருமம் என்பர். வாரிதி கடலாதலின், தரும வாரிதி அறக்கடலாயிற்று. “அறவாழி” எனத் தமிழ்ச் சான்றோர் கூறுவர். மருத வயல் தடம்பணை எனப்படும். தனி முதற் பொருள் - ஒப்பது மிக்கதுமில்லாத பரம்பொருள். துருமவான் - கற்பகமரம் நிறைந்த தேவருலகம். பிறவாப் பேரின்ப வாழ்வுக்குரியது திருவருள் வா வாதலின், அஃதொன்றே வேண்டத்தக்கதாதலால், “நின் அருளே” என்றும்; பேதையர்களோடு கூடிப் பெறும் பிறப்பிறப்புக் கேதுவாகிய கருமவாழ்வு வேண்டப்படாமை தோன்ற, “இவ்வுலகிற் பேதையர் கரும வாழ்வு வேண்டிலேன்” என்றும் கூறுகின்றார். இவ்வுலகையே கரும பூமி என்பவாகலின், இங்கு நடைபெறும் வாழ்வும் கரும வாழ்வு என்பதாம். கருமம் இன்னதென்பார், “பேதையர் புழுமலப்புலமாம் கருமவாழ்வு” என விளக்குகின்றார். பிலம் - ஆழ்ந்து இருண்ட குழி. தேவருலகைப் போக பூமி என்றும், அங்கு நிலவும் போகவாழ்வும் நிலையின்றிக் கெடுவதாமென்றும் புராணங்கள் புகலுதலால், “மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்” என மொழிகின்றார். “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு” (சதக) என்று திருவாசகம் ஓதுவது அறிக. திருத்தொண்டர் பலர்க்குச் சிவபரம் பொருள் சோதனை செய்தே திருவருள் செய்திருத்தலால், “அடியேன் தன்னைச் சோதியாது அருள்வதுன் பரமே” என்று உரைக்கின்றார். “கண்டலால் அருளுமில்லை கலந்தபின் பிரிவதில்லை” என்ற திருமொழி இக் கருத்தை யுட்கொண்டிருத்தல் காண்க.
இதனால், வேண்டுவது திருவருள் வாழ்வே; அதனைச் சோதனை செய்யாது அருளவேண்டும் என முறையிட்டவாறாம். (4)
|