945. அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும்
ஐயவோ நான்அதை அறிந்தும்
மருள்வதென் இயற்கை என்செய்வேன் இதனை
மனங்கொளா தருள்அரு ளாயேல்
தெருள்வதொன் றின்றி மங்கையர் கொங்கைத்
திடர்மலைச் சிகரத்தில் ஏறி
உருள்வதும் அல்குல் படுகுழி விழுந்தங்
குலைவதும் அன்றிஒன் றுண்டோ.
உரை: ஐயனே, அருள் வழங்குவதே உனக்கியல்பு என்பது உலகனைத்தும் தெரிந்த செய்தியாகும்; நான் அதனை அறிந்திருந்தும் மருள்வது எனக்கு இயற்கையாகவுளது; இதற்கு நான் என் செய்குவேன்; இதனைத் திருவுள்ளத்திற் கொள்ளாமல் திருவருள் செய்யா தொழிகுவாயானால், தெளிவுறும் வகையொன்றும் இல்லையாதலால், மங்கையரின் கொங்கை யென்னும் மேட்டுநிலத்து மலையுச்சி யேறி உருளுவதும், நிதம்பமாகிய படுகுழியில் வீழ்ந்து நிலைகுலைவதும் செய்வதன்றி வேறு ஒரு செயலும் இல்லையாம். எ.று.
சிவபெருமான் அருளே திருமேனியாக வுடையவனெனச் சைவநூல்கள் யாவும் உரைத்தலால் “அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும்” என்று கூறுகின்றார். திருஞானசம்பந்தர், “வினையாயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன்” (ஈங்கோய்) என்றும், “பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத் துணிந்தவன்” (ஐயாறு) என்றும் உரைப்பது காணலாம். யான் அதனை நன்கறிவேனாயினும், மலம் காரணமாகத் திரிபுணர்ச்சி யெய்திப் பிறப்பிறப்புக்கேதுவாய மருளுறுவது என்பால் இயல்பாகவுள தென்பாராய், “ஐயவோ நானதை யறிந்தும் மருள்வது என் இயற்கை” என இயம்புகின்றார். பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” (குறள்) எனச் சான்றோர் உரைப்பது காண்க. இம்மருள் நீங்குதற்கு நின் திருவருளை எதிர்நோக்கி மனமுருகிக் கலந்து வாழ்தல் வேண்டும்; வாழுமாறு அறியாத குற்றத்தை நின் திருவுள்ளத்திற் கொள்ளாது அருள்செய்க என்பாராய், “என்செய்வேன் இதனை மனங் கொள்ளா தருள்” என்றும், அருளாதொழியின், அறிவுத் தெளிவின்றி மாணாப் பிறப்புக் காளாய மங்கையர் உறவுற்று நிலைகுலைவேன் என்பார், “அருளாயேல் தெருள்வ தொன்றின்றி மங்கையர் கொங்கைத் திடர்மலைச் சிகரத்தில் ஏறி உருள்வதும், அல்குற் படுகுழி விழுந்தங் குலைவதும் அன்றி ஒன்றுண்டோ” என்றும் இயம்புகின்றார். “கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்து நான் வாழுமாறறியா மருளனேன்” (வாழா) என மாணிக்கவாசகர் உரைப்பது கருதத்தக்கது. தெருள்வது - மருள் நீங்கித் தெளிந்த அறிவு பெறுவது. திடர் - மேட்டு நிலம். அல்குல், ஈண்டு நிதம்பத்தின் மேற்று. மண்ணுலக வாழ்வில் பிறவிக்குரிய நெறியில் மங்கையர்பாற் பெறலாகும் காமநுகர்ச்சியினும் வேறு பேறின்மையின், “அன்றி யொன்றுண்டோ”எனக் கூறுகின்றார்.
இதனால், இறைவன் அருள் எய்தினாலன்றி மருள் நீங்கித் தெருட்சியுற்று உய்திபெற வழியில்லை எனத் தெரிவித்தவாறாம். (5)
|