946. உண்டுநஞ் சமரர் உயிர்பெறக் காத்த
ஒற்றியூர் அண்ணலே நின்னைக்
கண்டுநெஞ் சுருகிக் கண்கள்நீர் சோரக்
கைகுவித் திணையடி இறைஞ்சேன்
வண்டுநின் றலைக்கும் குழல்பிறை நுதலார்
வஞ்சக விழியினால் மயங்கிக்
குண்டுநீர் ஞாலத் திடைஅலை கின்றேன்
கொடியனேன் அடியனேன் அன்றே.
உரை: நஞ்சினை யுண்டு தேவர்கள் உயிருய்யக் காத்தருளிய ஒற்றியூர்த் தியாகப்பெருமானே, நின்னைக் கண்டு அன்பால் மனம் உருகிக் கண்கள் நீர் பொழிய இரு கையும் குவித்துத் திருவடி யிரண்டையும் வணங்குவதில்லேன்; வண்டுகள் மொய்த்து நின்று சூடிய பூக்களையலைக்கும் கூந்தலையும் பிறை போன்ற நெற்றியையு முடைய மகளிரின் வஞ்சம் கலந்த கட்பார்வையால் அறிவு மயங்கி, ஆழ்ந்த கடல் சூழ்ந்த மண்ணுலகின்கண் காமவிச்சைக்கு அலைகின்ற கொடியவனாயினும், யான் நினக்கு அடியன் அன்றோ? எ.று.
கடல் கடைய எழுந்த நஞ்சு கண்டு அதன் கொடுமை பொறாது தேவர் கூட்டம் உய்தி வேண்டிச் சிவன்பால் முறையிடவும், அவர் அதனையுண்டு அத் தேவர்களைக் காத்தமைபற்றி, “உண்டு நஞ்சுமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே” என்று பரவுகின்றார். “உண்ணற்கரிய நஞ்சையுண்டு ஒரு தோழந்தேவர் விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்” (புறவம்) எனத் திருஞானசம்பந்தரும், “அமரர்கட் கருள்புரிவது கருதி, நீலமார் கடல் விடந்தனையுண்டு கண்டத்தே வைத்த பித்த” (புன்கூர்) என நம்பியாயூரரும் கூறுவர். திருக்கோயில்களில் காணலாகும் சிவனுடைய திருமேனியைச் சிவனென்றே கருதுதலால், “நின்னைக் கண்டு நெஞ்சுருகிக் கண் கணீர் சோரக் கைகுவித் திணையடி யிறைஞ்சேன்” என்று இசைக்கின்றார். காண மிகும் அன்பால் மனம் உருகுதலால் கண்களில் நீர் பெருகி வழிகிறதென்றும், கைகள் குவிந்து உச்சியில் விளங்க வாய் சிவன் திருப்புகழை ஓதுவதை இங்ஙனம் விளக்குகின்றார். குழலில் சூடிய பூவின் தேனை யுண்டற்கு வண்டினம் மொய்த்தலைப்பதுபற்றி, “வண்டு நின்றலைக்கும் குழல்” என்றும், மங்கையரின் கட்பார்வையில் புறத்தே காதலன்பும் அகத்தே காமவேட்கையும் பொருந்துவதுகொண்டு “வஞ்சக விழி” என்றும் புனைந்துரைக்கின்றார். காம நாட்டத்தால் அறிவு நிறையழிந்து குலைதல் புலப்பட, “விழியினால் மயங்கி அலைகின்றேன்” எனக் கூறுகின்றார். குண்டு நீர் ஞாலம் - ஆழ்ந்த கடல் சூழ்ந்த நிலவுலகம். இறைவன் இணையடியை ஏத்தாமல் மங்கையர் விழி மயக்கில் நெறி பிறழ்ந்து இயங்கும் இயல்பினால் “கொடியனேன்” என்றும், உயிர் வாழ்க்கை தந்து அடிமை கொண்டமையை யுணர்தலின் “அடியனேன் அன்றே” என்றும் எடுத்துரைக்கின்றார். “பல்லுலகினில் உயிர் வாழ்க்கை தந்து அடிமை கொண்டமையை யுணர்தலின் “அடியனேன் அன்றே” என்றும் எடுத்துரைக்கின்றார். “பல்லுலகினில் உயிர் வாழ்க்கை கண்ட நாதனார்” (கேதீச்) என ஞானசம்பந்தர் அறிவுறுப்பதறிக.
இதனால், திருவடி யிறைஞ்சாது மகளிர் விழி மயக்கில் வீழ்ந்தலையும் கொடியனாயினும், யான் அடியனாதலால் அருளுக என முறையிட்டவாறாம். (6)
|