948.

     இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன்
          இளமுலை மங்கையர்க் குள்ளம்
     கனியவக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன்
          கடையனேன் விடயவாழ் வுடையேன்
     துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால்
          துணைநினை அன்றிஒன் றறியேன்
     தனியமெய்ப் போத வேதநா யகனே
          தடம்பொழில் ஒற்றியூர் இறையே.

உரை:

     தனித்த மெய்ஞ்ஞான வேத நாயகனே, பெரிய சோலைகளையுடைய ஒற்றியூர் உறையும் இறைவனே, இன்பம் தரும் நின்னுடைய திருவடிகளாகிய இரண்டு தாமரை மலர்களை யேத்துதலின்றி, இளமுலைகளையுடைய மங்கையருடைய உள்ளம் நெகிழுமாறு கொடுமையுடைய அவர்கட்கு ஏவல் செய்து வருந்தின யான், கடையனாய்ப் புலனுகர்ச்சியே வாழ்வெனக் கொண்டு வாழ்ந்தேன்; வெறுப்புடைய இவ்வுடலினின்றும் உயிர் பிரிந்தேகும்போது நின்னையன்றித் துணையாவது வேறொன்றும் அறியேன். எ.று.

     தனிய என்றவிடத்து அகரம் சாரியை. உண்மை ஞானத்தை நல்குவது பற்றி, “மெய்ப்போத வேத நாயகன்” என்று கூறுகின்றார். ஞானமும் நெறியும் காட்டுவது உண்மை ஞானமாதலால் அதனைத் “தனித்த மெய்ப்போதம்” என்று சிறப்பிக்கின்றார். வேதத்தை அருளினமையால் சிவனை “வேத நாயகன்” என்று விளம்புகின்றார். சிந்திக்கும் உள்ளத்துக்கு இன்பம் தருதலால், “இனியநின் திருத்தாள் இணைமலர்” என ஏத்துகின்றார். இளமைச் செவ்வியை யுடைய மகளிரை, “இளமுலை மங்கையர்” என்றும், நிலையின்றி யெங்கும் அலையும் இயல்புடைய அம்மங்கையர்க்கு ஏவல் செய்து மகிழ்வித்தல் மிக்க துன்புடைச் செயலாதல் பற்றி “இளமுலை மங்கையர்க்கு உள்ளம் கனிய ஏவல் செய்துழன்றேன்” என்றும் இயம்புகின்றார். மங்கையருள்ளம் நிலையின்றி யலைவ தென்பதை, “மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்றெங்கும் ஓடி யிடறும் சுரும்புகாள்” (சீவக. 892) என்று சான்றோர் கூறுவர். செந்நெறியிற் செல்லாமை தோன்ற அவர்களைக் “கொடியவர்” என்று குறிக்கின்றார். சுட்டு மாத்திரையாய் நின்ற தென்றலுமாம். தகவல்லன செய்துழன்றமையால் “கடையன்” என்றும், புலனுகர்ச்சி யொன்றே வாழ்வெனக் கருதினமை தோன்ற “விடய வாழ்வுடையேன்” என்றும் இசைக்கின்றார். துனி - வெறுப்பு. உடலினின்றும் உயிர் பிரியும்போது உடல் பொருள் ஒன்றும் துணையாவதில்லையாதலால் உயிர் பிரிந்திடுங்கால் “துணைநினை யன்றி யொன்றறியேன்” என்று சொல்லுகின்றார். “புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி யறிவழிந் திட்டைம் மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்றருள் செய்வான்” (ஐயாறு) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க.

     இதனால், சாகும்போதும் இறைவனை யன்றித் துணையாவது ஒன்றுமில்லை என்பதாம்.

     (8)