949.

     இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன்
          எழில்பெற உடம்பினை ஓம்பிக்
     குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக்
          கோதையர் குறுங்குழி அளற்றில்
     பொறையும்நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன்
          பொய்யனேன் தனக்குவெண் சோதி
     நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி
          நிமலனே அருளுதல் நெறியே.

உரை:

     வெண்மையான ஒளி யெங்கும் பரப்பும் வெண்ணீறணிந்த அழகனே, ஒற்றியூரமர்ந்த நிமலனே, நின்னுடைய திருவடியாகிய தாமரைகளைச் சிறிதும் வழிபடுதலின்றி உடம்பை அழகுறக் காத்து நாளும் தேயும் வெண்மதி போலக் காலத்தைக் கழித்து மகளிருடைய குறுகிய நிதம்பமாகிய சேற்றில் வீழ்ந்து பொறையும் நல்ல நிறையும் ஒழித்து வருந்திய பொய்யனாகிய எனக்கு அருள் செய்து நெறிப் படுத்துதல் முறையாகும். எ.று.

     தூய வெண்ணீற்றின்பால் ஒளி திகழ்தலால் “வெண்சோதி நிறையும் வெண்ணீற்றுக் கோலனே” என்று சிறப்பிக்கின்றார். வெண்ணீறு பூசப் பூசப் பொன்னிறம் தரும் என்பவாகலின், வெண்ணீறு தன்னியல்பின் வெண்மையான ஒளி திகழ்வதென்றற்கு “வெண் சோதி நிறையும் வெண்ணீறு” எனல் வேண்டிற்று. வெண்ணீறு, பூசுவார் மேனியைப் பொன்னிறமாக்கும் என்றனர் சான்றோர். “பொங்கொளி வெண் டிருநீறு” (மங்கை) எனச் சேக்கிழார் எடுத்துரைப்பர். நீறணிந்த மேனிக்கு அது கவினைத் தருதலால் “வெண்ணீற்றுக் கோலனே” என விளம்புகின்றார். நிமலன் - இயல்பாக மலமில்லாதவன். திருவடி தாமரை மலர் போல்வ தென்பவாதலால் “திருத்தாட் கமலங்கள்” எனவும், யாவரும் பரவுதற்குரியதாகவும் அதனைச் சிறிதளவும் செய்யவில்லை என்பார், “இறையும் ஏத்தேன்” எனவும் கூறுகின்றார். உடம்பினை உண்டியுடைகளால் எழில்பெற ஓம்பியது போல் உயிரை ஞான வொழுக்கங்களால் எழில்பெற ஓம்பினேனில்லை என்பதை “இறையும் ஏத்தேன்” என்றதனால் உணர்த்துகின்றார். உரியது செய்யாது காலங் கழித்தமைக்கு வகை கூறுவாராய், “எழில்பெற உடம்பினை யோம்பி” என்றும், “கோதையர் குறுங்குழியளற்றில் பொறையும் நன்னிறையும் நீத்து உழன்றலைந்தேன்” என்றும் உரைக்கின்றார். உள்ளுக்குணவும் புறத்துக்கு உடையும் பிறவும் தந்து பேணிக் காத்தமை விளங்க, “உடம்பினை எழில் பெற ஓம்பி” எனவும், மகளிரது காமக் கூட்டத்தில் வீழ்ந்து வருந்திய திறத்தை, “கோதையர் குறுங்குழி யளற்றில் உழன் றலைந்தேன்” எனவும், இம்முறையில் உடலோம்பலில் காலம் கழிந்தது என்றற்கு, “குறையும் வெண்மதிபோல் காலங்கள் கழித்து” எனவும் கூறுகின்றார். நாள் கழியக் கழிய வெண்மதி தேய்ந்து ஒளி குன்றுவதுபோல் நாளடைவில் உடல்வலி தேய்ந்து மேனி ஒளி குறைந்த தென்பதுணர்த்தற்குக் “குறையும் வெண்மதி போல்” என உவமையால் விளக்குகின்றார். காமக்கூட்டத்தில் நல்லறமாகிய பொறையையும், நன்னெறிக்குரிய நிறையையும் துறந்தமை தோன்ற, “பொறையும் நன்னிறையும் நீத்து” என விதந்துரைக்கின்றார். பொறை - பொறுமை. நிறை - மனத்தை நன்னெறிக்கண் நிறுத்துதல். இந்த வாழ்வில் சொல்லும் செயலும் ஒவ்வா தொழுகுவதுணர்ந்து, “பொய்யனேன்” என்று புகல்கின்றார்.

     இதனால், பெற்ற உடம்பு மெய்ஞ்ஞானப் பேற்றுக்குரிய தெனவுணராது, மகளிரது காம நுகர்ச்சிக்குரியதெனப் பிறழ நினைந்து உழன்றலைந்தமை காட்டித் திருவருள் ஞானம் நல்க வேண்டியவாறாம்.

     (9)