95.

    தெளிக்குமறைப் பொருளேயென் அன்பே என்றன்
        செல்வமே திருத்தணிகைத் தேவே யன்பர்
    களிக்குமறைக் கருத்தே மெய்ஞ்ஞான நீதிக்
        கடவுளே நின்னருளைக் காணே னின்னும்
    சுளிக்குமிடித் துயரும் யமன் கயிறும் ஈனத்
        தொடர்பு மலத்தடர்பு மனச்சோர்வு மந்தோ
    அளிக்குமெனை யென்செயுமோ அறியே னின்றன்
        அடித்துணையே யுறுதுணை மற்றன்றி யுண்டோ.

உரை:

     உணர்வைத் தெளிவிக்கும் வேதங்களின் உட்பொருளாகியவனே, எனக்கு அன்பும் செல்வமுமாகிய பெருமானே, திருத்தணிகையில் எழுந்தருளும் தெய்வமே, மெய்யன்பர் உண்மை தெளிந்து மகிழ்தற் கேதுவாகிய வேதக் கருத்தே, மெய்ம்மை யறிவாகிய நீதிக் கடவுளே, நின்னுடைய திருவருளைப் பெறாமல் பெறுவன வெல்லாம் வறுமைத் துன்பமும் உயிர் கவரும் இயமனது பாசக் கயிற்றுத் துன்பமும் கீழாயவர் தொடர்பும் மலப்பிணியும் மனத் தளர்ச்சியுமே யாதலால், நின் அருளால் ஆதரிக்கப்பட வேண்டிய என்னை அவை எத்துயரில் ஆழ்த்துமோ அறியேன்; உனது இரண்டாகிய திருவடி யல்லது மிக்க துணை எனக்கு வேறே யாது உளது? எ. று.

     ஐயம் திரிபுகளால் கலக்கமுறும் அறிவுக்குத் தெளிவு நல்குவது வேத நூல் என்ற கருத்தால் “தெளிக்கு மறைப்பொருள்” என்றும், மெய்யுணர் வுடையோர்க்கு உண்மை யொளி தந்து இன்பம் செய்வது தோன்ற, “அன்பர் களிக்குமறைக் கருத்தே” என்றும் எடுத்து மொழிகின்றார். உண்மைக் காட்சிக்கு அன்பும் மன நிறைவுக்குச் செல்வமும் பொருளாதலால், “என் அன்பே என்றன் செல்வமே” எனவும், இரண்டாலும் எய்தாவிடத்து எய்துவிக்கும் திருவருளைத் “திருத்தணிகைத் தேவே” எனவும் தெரிவிக்கின்றார். மெய்ம்மை யுணரும் திறமிலார் நீதி வழங்கமாட்டாமையின், அதனைச் செய்யும் முருகக் கடவுளை, “மெய்ஞ்ஞான நீதிக் கடவுளே” என இயம்புகின்றார். “நீதி பலவும் தன்ன வுருவாமென மிகுத்ததவன் நீதியொடு தானமர்” பவன் (வைகாவில்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. திருவருள் பெறாது துன்பமே பெற்றமை யுரைப்பார், “நின் அருளைக் காணேன்” என்றும், கண்ட துன்பத்தை வகுத்துரைக்கலுற்றவர், “மிடித்துயரும் யமன் கயிறும் ஈனத் தொடர்பும் மலத்தொடர்பும் மனச் சோர்வும்” என்றும் கூறுகின்றார். மிடி - வறுமை. மிடியுற்ற போது சிந்தை கூர்மையும் தெளிவுமின்றி மழுங்குவது பற்றிச் “சுளிக்கும் மிடித்துயர்” எனவும், சாதல் துன்பத்தை “யமன் கயிறு” எனவும் உரைக்கின்றார். மலத் தொடர்பு உயிரையும், மனச் சோர்வு உடலையும் இடர்ப்படுத்துவன என அறிக. நின் திருவருளால் அளிக்கப் படற்குரிய யான் மிடித்துயர் முதலாயவற்றால் அவல முறுவது பொருந்தாது என்றற்கு “அளிக்குமெனை என் செயுமோ அறியேன்” என்றும், உற்றார்க்கு உறு துணையாவன இரண்டாகிய திருவடி என்பார், “நின்றன் அடித்துணையே உறுதுணை” என்றும் இசைக்கின்றார்.

     இதனால் அருணிலையமாகிய திருவடித் துணையே உறுதுணை யென வுரைத்துக் குறை யிரந்தவாறாம்.

     (3)