950. நெறியிலேன் கொடிய மங்கையர் மையல்
நெறியிலே நின்றனன் எனினும்
பொறியிலேன் பிழையைப் பொறுப்பதுன் கடனே
பொறுப்பதும் அன்றி இவ் வுலக
வெறியிலே இன்னும் மயங்கிடா துன்தன்
விரைமலர் அடித்துணை ஏத்தும்
அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே
அன்றினார் துள்ளறுத் தவனே.
உரை: ஒற்றியூர் அருளரசே, பகைவர் துடிப்பை வேரறுத்தவனே, நன்னெறியி னில்லாமல் நெறிகோடிய மங்கையர் காட்டும் காம நெறியிலே நின்றேனாயினும், அறிவில்லாத என் பிழைகளைப் பொறுப்பது உனக்குக் கடனாகும்; பொறுப்பதுடன் இவ்வுலகியல் மயக்கில் இனியும் யான் மயங்காவாறு உன் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை யேத்தும் நன் ஞானத்தை என்னுள் விளங்கச் செய்வாயாக. எ.று.
அன்றினார் - பகைவர்; தக்கனும் திரிபுரத் தசுரரும் போல் மாறு பட்டவரென்றுமாம். துள்ளறுத்தவன் - துள்ளலைப் போக்கியவன். நன்னெறியாகிய ஒழுக்க நெறியை மேற்கொள்ளாமல் தீயொழுக்கமாகிய வரைவில் மகளிரைக் கூடியலையும் நெறியிலே நின்றேன் என்பாராய், “நெறியிலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன்” என்று கூறுகின்றார். மகளிர்க்கு வரையறை யின்றி ஆடவரைக் கூடி யொழுகும் செயல் கொடிதாதலால் அவர்களைக் “கொடிய மங்கையர்” என்றும், காமவிச்சையைத் தூண்டித் தம்முடைய அடியைச் சார்ந் தொழுகுமாறு ஆடவர் மனத்தைப் பிணித்து நிறுத்தும் காமநெறியை “மையல் நெறி” யென்றும் உரைக்கின்றார். தம்முடைய செயற்குக் காரணம் நல்லறிவில்லாமை யென்பார், “பொறியிலேன்” எனவும், அதனால் விளையும்பிழைகளைப் பொறுத்தாளுதல் பெரியோர் கடன் என்பார் “பொறியிலேன் பிழையைப் பொறுப்பதுன் கடன்” எனவும் இயம்புகின்றார். “உத்தர கோசமங்கைக் கரசே, பொறுப்பரன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே” (நீத்தல்) என்று திருவாசகம் ஓதுவதறிக. உலக வாழ்வின் பொய்ம்மை நோக்காது அது நல்கும் சிற்றின்பத்தில் மயங்கிக் கிடந்து இனியதன்கண் மயங்குதல் தீதென்றுணர்ந்தமை புலப்பட, “இவ்வுலக வெறியிலே இன்னும் மயங்கிடாது” என்றும், சிவனடியே சிந்திக்கும் திருஞானம் அருள வேண்டும் என்பார், விரை மலர் அடித்துணை யேத்தும் அறிவுளே அருள்வாய்” என்றும் வேண்டுகின்றார்.
இதனால், உலகிய லின்பமே விழைந்தொழுகும் மருளறிவைப் போக்கித் திருவடி பரவும் அருளறிவு நல்குதல் வேண்டுமென முறையிட்டவாறாம். (10)
|