953.

     ஆறடுத்துச் சென்றஎங்கள் அப்பருக்கா அன்றுகட்டுச்
     சோறெடுத்துச் சென்ற துணையே சுயஞ்சுடரே
     ஊறெடுத்தோர் காணரிய ஒற்றிஅப்பா உன்னுடைய
     நீறடுத்த எண்தோள் நிலைமைதனைப் பாரேனோ.

உரை:

     திருப்பைஞ்ஞீலிக்குரிய நெறி பற்றிச் சென்ற எங்கள் திருநாவுக்கரசர் பொருட்டு அந்நாளில் கட்டுச் சோறு கொண்டு சென்றளித்த துணைவனே, தனிப்பெருஞ் சுடரே, குற்றம் செய்தோர் காண்டற்கரிய ஒற்றியூர் அப்பனே, உன்னுடைய திருநீறணிந்த தோள்கள் எட்டின் சிறந்த நிலைமையைப் பாரா தொழிவேனோ. எ.று.

     திருப்பைஞ்ஞீலி திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரியின் வடகரையில் உளது; இதனை நோக்கி வழிபட வந்த நாவுக்கரசர்க்குக் காவிரியைக் கடந்து கரையேறிப் பின்னர்ப் பசிதோன்றி வருத்தவே, எதிரே திருநீறணிந்த அந்தணர் ஒருவர் தோன்றிக் “காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி” அப்பர் பெருமானைப் பார்த்து, “வழிவந்திளைத்தீர்; இங்கு என்பாலே பொதி சோறுண்டு இதனை யுண்டு தண்ணீர் இப்பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர்” என்று சொல்லிச் சோறும் உண்பித்துப் பைஞ்ஞீலி வரைக்கும் துணையாய் வந்து நீங்கி மறைந்தார். இச் செய்தியை நினைந்து வியந்து மகிழும் வள்ளலார், “அப்பருக்கா அன்று கட்டுச் சோறெடுத்துச் சென்ற துணையே” என்றும், பைஞ்ஞீலிப் பெருமானாகிய ஆரணீய விடங்கர் தனியருட் சோதி வடிவினராகக் காட்சி தருதலால், “சுயஞ்சுடரே” என்றும் சொல்லித் துதிக்கின்றார். ஊறு, தீவினைமேல் நிற்றலின், ஊறெடுத்தோர் என்றது தீது செய்து குற்றப்பட்டாரைக் குறிப்பதாயிற்று. “பெரியவன் சிறியவர் சிந்தை செய்ய வரியவன்” (வல்லம்) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. திருநீற்றுக் கோலத்தனாய்ச் சிவபெருமான் நாவுக்கரசர் முன் தோன்றியது நினைவில் நிலாவுதலால், “உன்னுடைய நீறடுத்த எண்டோள் நிலைமையினைப் பாரேனோ” என விழைகின்றார். பைஞ்ஞீலிப் பரமனைத் “தூயவன் தூய வெண்ணீறு மேனிமேற் பாயவன்” (பைஞ்ஞீலி) என ஞானசம்பந்தரும், “நீறுறும் திருமேனி” (பைஞ்ஞீலி) என நம்பியாரூரரும்வழங்கிய அருளுரையை யொட்டிச் சேக்கிழாரடிகள், “மேவும் திருநீற் றந்தணராய்” (நாவுக். 305) என எடுத்தோதினமையின் வள்ளலாரும் நீறணிந்த கோலத்து எண்டோள்களைச் சிறப்பித் துரைக்கின்றார்.

     இதனால், சிவனுடைய திருநீறணிந்த எண்டோள்களைச் சிறப்பிக்கின்றார்.

     (3)