954. சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
உய்வைத்த உத்தமனே ஒற்றிஅப்பா உன்னுடைய
தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ.
உரை: சைவத் தலைவனே! தவத்தோர் பெருமகனே, மெய்ம்மை சான்ற உள்ளங்களில் கலந்து நிற்கின்ற வித்தகனே, உயிர்கட் கெல்லாம் உய்தி யுண்டென நியமித்த உத்தமனே, ஒற்றியூர் அப்பனே, உன்னுடைய தெய்வப்புகழை என் செவி நிறையக் கேளா தொழிகுவேனோ, இல்லை. எ.று.
சைவக் கோலத்தில் எல்லா வுலகிற்கும் தலைவராய் நிலவுவதால் “சைவத் தலைவர்” என்றும், தவமாயும் தவத்தோர் பெறும் கதியாயும் இருத்தலால், சிவனைத் “தவத்தோர்கள் தம்பெருமான்” என்றும் குறிக்கின்றார். “தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல், உவந்தான்” (நெல்லிக்கா) என ஞானசம்பந்தர் உரைப்பதால் இப் பொருண்மை காணப்படும். மெய்ம்மை நிறைந்த வுள்ளமுடையராய் எய்தும் வேதனைகளைப் பொருட்படுத்தாத மேலோர்க்கு அருள் புரிவனாதலால், அதனை நினைந்து, “மெய்வைத்த வுள்ளம் விரவி நின்ற வித்தகனே” என விளம்புகின்றார். வித்தகன் - ஞானமுடையவன். “மெய்யராகிப் பொய்ம்மை நீக்கி வேதனையைத் துறந்து செய்யரானார் சிந்தையானே” (வலிவலம்) என்று ஞானசம்பந்தர் கூறுவர். உயிர்கட்கு உடம்பும் உலகியல் வாழ்வும் தந்ததுடன் உய்யும் நெறியும் காட்டுதலால் “உய்வைத்த வுத்தமனே” என வுரைக்கின்றார். உய்வு வைத்த என்பது உய்வைத்த என வந்தது. உய், முதனிலைத் தொழிற்பெயர். “அறிநீர்மையிலெய்தும் அவர்க்கறியும் அறிவருளும் குறிநீர்மையர்” (இடும்பா) என்று ஞானசம்பந்தர் அறிவிப்பது காண்க. உலகொடுங்க வொடுங்கும் உலகியற் புகழ் போலாது தனக்குத் தானே ஆதார ஆதேயமாகிய புகழ் என்றற்கு “தெய்வப் புகழ்” எனவும், கேட்பார்க்கு ஞானப்பயன் விளைவது தோன்றச் “செவி நிறையக் கேளேனோ” எனவும் கூறுகின்றார். இத் தெய்வப் புகழைத் திருவள்ளுவர், “பொருள் சேர் புகழ்” எனப் புகல்கின்றார்.
இதனால், சிவனது தெய்வப் புகழைச் சிறப்பித்தவாறாம். (4)
|