955.

     பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
     தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
     ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
     ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எல்லாம் தீரேனோ.

உரை:

     பிணங்கிப் பிரிவோர் இல்லாத ஒற்றியூர் அப்பனே! பாடுகின்ற பாவலர் பாடப் பாடற்குப் பரிசு நல்கும் புண்ணியனே, உண்மையறிதல் வேண்டித் தேடும் அறிஞர் தேட அறிவெல்லைக்கப்பால் நிற்கும் தியாகப்பெருமானே, அம்பலத்தின்கண் ஆடுகின்ற நின் சேவடியைக் கண்டு என் துன்பமெல்லாம் நீங்காதொழிவேனோ, ஒழியேன். எ.று.

     ஊடுதலும் கூடுதலும் அன்புடையார்பாற் காணப்படுவனவாதலின், அன்பர்கள் பிணங்கினும் துனியுறும் அளவு ஊடுதல் இல்லையாதலால் “ஊடுகின்றோ ரில்லாத ஒற்றியப்பா” என்று உரைக்கின்றார். பண்ணார்ந்த பாடல்களைப் பாடும் பாவலர்க்கும் இசைவாணர்க்கும் பரிசு தரும் வள்ளலாதல் விளங்கச் சிவனைப் “பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே” என்று புகழ்கின்றார். ஞானசம்பந்தர் முதலியோர் பாடற்கிரங்கிப் பரிசளித்த செய்திகள் இங்கே நினைக்கப்படுகின்றன. “பாடுவார்க் கருளும் எந்தை” (முதுகுன்) என ஞானசம்பந்தரும், “பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தான்பெம்மான்” (அம்மானை) என மாணிக்கவாசகரும் எடுத்தோதுதல் காண்க. அளித்தல் புண்ணியமாதலால் “புண்ணியனே” என்று இயம்புகின்றார். சிவனது முழுமை காண வேண்டித் திருமாலும் நான்முகனும் தேட, ஒளியுடைய தீயுருவாய் நின்றமை பற்றி, “தேடுகின்றோர் தேட நிற்கும் தியாகப் பெருமானே” என்று கூறுகின்றார். திருமால், பிரமன் என்ற தேவரிடத்தே யன்றித் தேடும் செயல் அறிவுடையோர்பால் இன்றும் உளதாகலின், “தேடுகின்றோர்” என நிகழ்காலத்தாற் கூறுவது பொருத்தமாகவுளது. தேடினும் காணலாகாமை வற்புறுத்துவாராய், “அன்னமாய் அயனுமால் அடிமுடி தேடியும் இன்னவாறென வொணா ஏடகத் தொருவனே” (ஏடகம்) என்று ஞானசம்பந்தர் உரைக்கின்றார். தேட நின்றானாயினும் அன்பர் அன்புள்ளத்தில் இனிய ஒளியாய்த் தன்னை நல்குகின்றானென்றற்குத் “தியாகப் பெருமானே” என்று செப்புகின்றார். அதனைக் கண்டு இன்புற்று ஞானசம்பந்தர், “நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி நினைவிலும் எனக்கு வந்தெய்தும் நின்மலர்” (கருக்குடி) என்று ஓதுகின்றார். சிற்றம்பலத்தில் திருக்கூத்தியற்றும் திருக்கூத்தைக் கண்ட விடத்துத் துன்பமெல்லாம் மறந்து உள்ளமொன்றி இன்பத்தில் ஆழ்ந்து விடுவதால், “அம்பலத்துள் ஆடுகின்ற சேவடிகண் டல்லலெலாம் தீரேனோ” என்று தெரிவிக்கின்றார். “சிற்றம்பலவன் திருவடியைக் கண்டகண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே” (கோயில்) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. செம்மை யெனும் சிவபோகம் நல்கும் திருவடி என்றற்குச் “சேவடி” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், அம்பலத்தில் ஆடும் சிவனுடைய திருவடிக் காட்சியின் சிறப்புரைத்தவாறாம்.

     (5)