956. பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
ஊணாக உள்ளுவந்த ஒற்றிஅப்பா மால்அயனும்
காணாத நின்உருவைக் கண்டு களியேனோ.
உரை: பூணாரமாகிய பாம்பு அசைந்தாட அம்பலத்தில் கூத்தியற்றும் புண்ணியனே, உயர்ந்த மேரு மலையை வில்லாக வளைக்கும் சிவனே, கடலில் எழுந்த விடத்தை உணவுபோல வுண்ட ஒற்றியூர் அப்பனே, திருமாலும் பிரமனும் காணாதொழிந்த நினது திருவுருவைக் கண்டு மகிழாதொழிவேனோ, காணாதொழியேன். எ.று.
அம்பலத்தில் ஆடுங்கால் மார்பிலும் தோளிலும் கிடக்கும் பாம்புகளும் ஆடுதலால் “பூண்நாகம் ஆடப் பொது நடிக்கும் புண்ணியனே” என்றும், பாம்புகள் கண்டார்க்கு அச்சம் விளைவியாமல் சிவனது திருவுருவுக்கு அணியாக விளங்குதலால், “பூணாகம்” என்றும், புண்ணியத்தின் வடிவமே சிவமாதல் பற்றிப் “புண்ணியனே” என்றும், புகல்கின்றார். வானளாவ வுயர்ந்த மேருமலை “சேணாகம்” எனப்படுகிறது. அதனை வாங்குதல் என்பதால் வளைத்தலாதலால் மேருமலையை வில்லாக வளைத்த செய்தி உரைக்கப்படுவதாயிற்று. “பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக் கையினார்” (ஆலம்பொழில்) என நாவுக்கரசர் கூறுவர். உண்டற்காகாத நஞ்சினைப் பிறர் அமுதுண்டு உய்தல் விரும்பி அமுதமென வுண்ட அரிய செயலை, “கடல் விடத்தை ஊணாக வுள்ளுவந்த ஒற்றியப்பா” எனச் சிறப்பிக்கின்றார். “எண் பெரிய வானவர்கள் நின்று துதி செய்ய இறையே கருணையாய், உண்பரிய நஞ்சுதனை யுண்டுலகம் உய்யவருள் உத்தமன்” (மாணி) என ஞானசம்பந்தர் கூறுவர். தேவ தேவர்களாகிய திருமாலும் பிரமனும் காணாத பெருமை யுடைத்தாதலின், மக்கள் காண்பது அரிதெனினும், கண்டு களிக்கும் விருப்பம் மிகவுடையேன் என்பார், “மாலயனும் காணாத நின்னுருவைக் கண்டு களியேனோ” என்று தெரிவிக்கின்றார். ‘மாலும்’ என உம்மை விரித்துக் கொள்க.
இதனால், பிரமனும் மாலும் காணாத சிவனது திருவுருவைக் காணவெழும் விழைவினை வெளியிடுமாறாம். (6)
|