957.

     கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால் அயனும்
     துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிதம்
     உள்ளுவார் உள்உறையும் ஒற்றிஅப்பா உன்னுடைய
     தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.

உரை:

     அன்பு கொள்பவர் மனத்திற்கொள்ளும் உயர்மணியே, மாலும் அயனுமாகிய தேவர்களின் செருக்கடக்கும் தலைவனே, நெஞ்சில் நினைவின்கண் எழுந்தருளும் ஒற்றியப்பனே, உன்னுடைய தெளிந்த நீண்ட அழகிய கழலணிந்த திருவடியில் என் சிந்தையை நிறுத்தி யொழுகுவேனோ? எ.று.

     அறிவு நினைவு செயல்களால் மக்கள் வேறுபடுபவராதலின், சிவ நெறி மேற்கொண்டு சிவபரம்பொருளை மனம் கொண்டொழுகுவோரைக்“கொள்ளுவார்” எனவும், அவர்கள் மனத்தின்கண் உயர்ந்த மணிபோல் நின்று ஞானவொளி செய்தலால், “குலமணியே” எனவும் கூறுகின்றார். உடம்பாகிய கோயிற்குள் இலங்கும் மனமணி யென்று கூறுகின்றார் திருநாவுக்கரசர் (தனி-நேரிசை). மாலும் அயனும் தாந்தாம் தலைவரெனத் தருக்கிய தருக்கடக்கத் தழலுருக் கொண்டு ஆதியும் அந்தமுமில்லாத தாணுவாய் நின்ற வரலாறு புலப்பட, “மால் அயனுமாய்த் துள்ளுவார் துள்ளடக்கும் தோன்றலே” என்று சொல்லுகின்றார். “பிரமனும் மாலும் பிரானே நான் என்னப், பிரமன்பால் தங்கள்தம் பேதைமையாலே பரமன் அனலாய்ப் பரந்து முன்னிற்க, அரனடி தேடியரற்றுகின்றாரே” (திருமந்.) என்று சான்றோர் உரைப்பது காண்க. இருவரும் பிணங்கிப் பேதுற்றதை, “தாருறு தாமரை மேலயனும் தரணியளந்தானும், தேர்வறியா வகையால் இகலித் திகைத்துத்” (வலம்புரம்) திரிந்தனர் என ஞானசம்பந்தர் கூறுகின்றார். துள்ளனக்கும் என்ற விடத்துத் துள்ளென்பது முதனிலைத் தொழிற்பெயர். “துள்ளும் இருவர்க்கும் வள்ளல்” (ஆரூர்) என ஞானசம்பந்தர் குறிக்கின்றார். நினைப்பவர் மனத்தையே தனக்குக் கோயிலாகக் கொள்வது சிவனது அருளியல் என்று சான்றோர் தெளியவுரைத்தலால் “உள்குவார் உள்ளுறையும் ஒற்றியப்பா” என வுரைக்கின்றார். திருநாவுக்கரசர் “நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்” (கோயில்) என்று கூறுவது காண்க. சிவபரம் பொருள் அருவம் உருவமெனும் இரண்டும் கடந்து இன்ன தன்மைத்தென எண்ண வாராமையின் சிந்தனைக் கரியதாயினும், சிந்தித்தவழிச் சிந்தனையில் தேனூறியின்பம் செய்தல் பற்றித் திருமேனியும் திருவடியும் பெரியோர் சிறந்தெடுத்துக் கூறுதலால் “உன்னுடைய பூங்கழற்கு என் சிந்தை வைத்து நில்லேனோ” என்று இசைக்கின்றார். தெளிந்த ஒளியும் அழகும் உடைமை பற்றித் திருவடியை, “தெள்ளுவார் பூங்கழல்” என்று புகழ்கின்றார்.

     இதனால், சிவபெருமான் திருவடியில் சிந்தை வைத்தொழுகும் ஆர்வம் புலப்படுத்தவாறு.

     (7)