958. செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றிஅப்பா உன்வடிவம்
இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ.
உரை: சிவந்த மேனியில் திருநீறணிந்த பேரழகனே, நின் தன்மை எத்தன்மையாம் என யாரும் அறிய முடியாதவனே, கருடனை யூர்தியாக வுடைய திருமால் பரவும் ஒற்றியூரப்பனே, உனது வடிவத்தை இவ்வண்ணம் என்று என் இதயத்தில் எழுதேனாவனோ? எ.று.
செம்மேனி யம்மான் எனப்படுதலால், சிவனது திருமேனியை “செவ்வண்ணத் திருமேனி” என்றும், திருநீறணிதலால் அது மிக்க அழகுறுவது பற்றி, “திருநீற்றுப் பேரழகா” என்றும் சிறப்பிக்கின்றார். “இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே” (தனி. தாண்ட) எனத் திருநாவுக்கரசர் கூறுவதால், “எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்” என இயம்புகின்றார். உவண வூர்தியாதல்பற்றிக் திருமாலை “உவணன்” என்று கூறுகின்றார். உவணன், உவ்வண்ணன் என விரிந்தது செய்யுள் விகாரம் “அவன் அருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே” என்ற அப்பரடிகள், இதனை யடுத்து, “பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன் புலித்தோல் உடைக்கண்டேன்” என்று தொடங்கி, “அன்னத்தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை அலற வடர்த்திட்ட அடியுங் கண்டேன், சின்னமலர்க் கொன்றைக் கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுட் கண்டவாறே” என்றதை நினைந்த வள்ளற் பெருமான், தாமும் அவ்வாறு அகக்கண் கொண்டு சிந்தையுட் காண்டல் வேண்டு மென்றெழுந்த ஆர்வத்தால், “உன் வடிவம் இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ” என்று இயம்புகின்றார்.
இதனால், சிவனை இதயத் தெழுதிக் காணற் கெழுந்த ஆர்வம் புலப் படுத்தியவாறு. (8)
|