959. மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றிஅப்பா என்னுடைய
வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ.
உரை: ஆடற்குரிய அம்பலத்தை யுடையவனே, திருமாலும் பிரமனும் வேறுள்ள தேவர்களும் கயிலை மலையை யுடையவனே என்று முறையிடக் கேட்டு அவர்கட்குற்ற குறைகளைப் போக்கிய கோமானே, உள்ளத்தில் ஒன்றுதல் உடையவனே, ஊர்தியாக விடையை யுடையவனே, ஒற்றியூ ரப்பனே, எனது மனத்தின் வன்மைத் தன்மையை நீக்குவாயாக என்று மலர் போலும் உன் திருவடியைப் போற்றுவேனோ. எ.று.
மன்று தோறும் ஆடல் புரியும் கூத்தப் பெருமானாதலால் “மன்றுடையாய்” என்றும், திருமால் பிரமன் ஆகிய தேவதேவர்களும் பிற தேவர்களும் கயிலைக் குன்றை யுரிமையாக வுடையவனே என்று வேண்டிக் கொள்வதை எடுத்தோதுகின்றாராகலின், “மன்றுடையாய் மாலயனும் மற்றுமுள வானவரும் குன்றுடையாய் என்ன” என்றும், தனது அருள் நோக்கி வாழ்வோருடைய குறையைப் போக்குதல் கோமகற்குக் கடனாதல் பற்றி, “குறை தவிர்த்த கோமானே” என்றும் கூறுகின்றார். ஒன்று - ஒன்றுதல்; முதனிலைத் தொழிற் பெயர். ஒன்றுதலாவது, தன்னைச் சேர்ந்தவர்களைத் தானாகச் செய்வது, “சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (கழுமலம்) என ஞானசம்பந்தரும், “தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசனுக்கே” (பொன்வண்) என்று சேரமானும் உரைப்பதனாலறிக. நன்மை நன்றெனவருதல் போல வன்மை வன்றென வந்தது. கற்போல் இறுகி இரக்கமின்றி வன்மை யுற்றிருக்கும் மனத்தை மென்மையும் அன்பும் உடையதாக உடைத்து நுணுக்குதல் வேண்டும் என்பார், “வன்று உடையாய்” என இறைஞ்சுகின்றார். இனி, வன்மை ஈறுகெட்டு வன்என நின்றது எனக் கொண்டு வன் துடையாய் எனப் பிரித்துப் பொருளுரைப்பினும் ஆம். “காதலித் தேத்திய மெல்லினத்தார் பக்கம் மேவினர்” என ஞானசம்பந்தரும், “வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே, கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டு கொண்ட அம்பலவன்” (கோத்தும்பி) என மாணிக்கவாசகரும் உரைப்பன காண்க. “கருணையே நோக்கிக் கசிந்து உளம் உருகிக் கலந்து” வாழ்வதுதான் வாழ்க்கை முறை. அதனால்தான் வள்ளலார் இவ்வாறு வேண்டுகிறார்.
இதனால், வன்மை யின்றி மென்மை சான்ற மனத்துடன் சிவன் திருவடியைப் போற்ற வேண்டுமென விளம்பியவாறு. (9)
|