96. உண்டாய வுலகுயிர்கள் தம்மைக் காக்க
ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
கண்டாயே விவ்வேழை கலங்கும் தன்மை
காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
தண்டாத நின்னருட்குத் தகுமோ விட்டால்
தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
விண்டாதி தேவர் தொழும் முதலே முத்தி
வித்தே சொற்பதம் கடந்த வேற்கையானே.
உரை: தணிகை மலையில் வாழும் பரம்பொருளே, பன்னிரண்டு கண்களையுடையவனே, திருமால் முதலிய தேவர்கள் தொழுகின்ற முதல்வனே, முத்திப் பேற்றுக்குக் காரணமாகியவனே, சொல்லப்படும் உயர் பதங்கட்கு மேலாய வேற்படை யேந்தும் பெருமானே, உள்ளனவாய் நிற்கும் உலகுகளையும் உயிர்களையும் காத்தற் பொருட்டு அவை காணா வகையில் அவ்வுயிர் உலகுகளில் மறைந்திருப்பவனே, உயிர்கள் தாமும் வினை பல செய்தே வாழச் செய்பவனே, ஏழையாகிய யான் மனங் கலங்கி நிற்கும் தன்மையைக் கண்டிலையோ; அவ்வாறு இருப்பது குன்றுதலில்லாத நின் திருவருள் நிலைக்குத் தகுவ தொன்றோ; என்னிலையை நீ காணா தொழிவது நினக்குத் தரும மாகா தன்றோ? எ-று.
தணிகை மலையில் எழுந்தருளி உலகுயிர்கட்கு வாழ்வளிக்கும் பரம்பொருளாவது புலப்படத் “தணிகைவரைத் தலத்தின் வாழ்வே” என்று கூறுகின்றார். திருமால் முதலிய மூவர்க்கும் முதல்வன் என்றற்கு “விண்டு ஆதி தேவர் தொழும் முதலே” எனவும், நன் ஞானத்தால் வீடு பேறெய்தும் உயிர் வகைகட்கு வேண்டப்படும் அறிவு செயல்களை ஊக்குவது பற்றி, “முத்தி வித்தே” எனவும் மொழிகின்றார். சரியை முதலிய தவத்தால் நலம் பெற முயல்பவருள் சரியையில் நிற்பார்க்குச் சாலோகமும், கிரியையில் நிற்பவர்க்குச் சாமீபமும், யோகியர்க்குச் சாரூபமும், ஞானத்தார்க்குச் சாயுச்சியமும் ஆகிய பதபர முத்திகள் எய்துமென நூல் சொல்லுதலால் அவற்றைச் “சொற்பதம்” என்றும், பத முத்திகட்கு மேலாய பரமுக்தியில் இழுத்தல் பற்றி முருகக் கடவுளைச், “சொற்பதம் கடந்த வேற்கையோன்” என்றும் இயம்புகின்றார். சொல்லும் பொருளுமாகிய உலகிரண்டினுள் சொல்லுலகம் நுண்ணிதாகலின், அதனினும் நுண்ணிய பொருளாதல் பற்றிச் “சொற்பதம் கடந்தோன்” என்று கூறுகின்றா ரென்றுமாம். சிறப்புடைய படையாதலால் வேற்படையை விதந்து கூறுகிறார். உளதாய்க் காணப்படுதலால் “உண்டாய உலகு” எனவும், அதன்கண் உருக்கொண்டுலவுவது கண்டு உயிர்களை உடனிறுத்தி “உலகுயிர்கள்” எனவும் இசைக்கின்றார். உயிர்களை வாழ்வித்தல் காத்தலாதலின், காக்குமிடத்து அறிவன அறிவித்தற் கண்ணும் செய்வன செய்வித்தற் கண்ணும் உயிர்கட்கு உரிமை யளித்துத் தான் அவற்றுள் ஒன்றிச் சுரந்து நிற்குமாறு புலப்பட, “ஒளித்திருந்து” என்றும், வாழ்வு தானும் வினை வடிவில் அமைந்திருத்தலால் உயிர்களை வாழ்விக்கும் அருட்செயலை, “அவ்வுயிர் வினைகள் ஒருங்கே நாளும் கண்டாயே” என்றும், உயிர் தோறும் உயிர்க் குயிராய் ஒன்றியிருந்து செய்வன தவிர்வன வற்றிற் குரிய அறிவு தந்தருளும் நீ என்னுள் இருந்து யான் படுவன கண்டு அருளுகின்றா யில்லையே என்பார், “இவ்வேழை கலங்கும் தன்மை காணோயோ” என்றும், எம் போல் இரு கண் கொண்டு ஒன்றொன்றே நோக்குவது போலாமல் பலவற்றையும் ஒருசேரக்குறைவறக் காணும் பன்னிரண்டு கண்களை யுடையவனாயிற்றே என்பார், “பன்னிரண்டு கண்கள் கொண்டோய்” என்றும், இத்துணை நலங்களையுடைய பெருமானாகிய நீ எனது துன்ப நிலையைக்காணா தொழிதல் தகைமை யன்றென்பார், “தண்டாத நின்னருட்குத் தகுமோ” என்றும் இரந்துரைக்கின்றார். தண்டுதல் - குறைதல். வழங்கத்தவாத வளமிக்க அருட் கடலாதலால் “தண்டாத நின் அருள்” என்று புகழ்கின்றார். பிறர் அவலம் கண்டு இரங்காமை அருளாளர் பண்பாகாமையே யன்றி அவர்கட்கு அறமுமாகா தென்றற்கு, “நின் அருட்குத் தகுமோ விட்டால் தருமமோ” என முறையிடுகின்றார்.
இதனால், தமது அவல நிலை கண்டு இரங்கா தொழிதல் அருளுருவாகிய முருகப் பெருமானுக்குத் தகவும் தருமமும் ஆகா வென முறையிட்டவாறாம். (4)
|