960. குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றிஅப்பா என்கருத்து
முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
உரை: குணமுடைய வழிபாடின்றிக் குற்றம் செய்தாலும் குணமாகக் கொண்டு அருளே செய்யும், நல்ல தவஞானிகள் உள்ளத்தின் நடுவே நிற்கின்ற பெருமானே, தன்னை யடைந்தவர்க்கு நல்ல துணை புரிபவனே, ஒற்றியூர் அப்பனே, என் கருத்து முடிய வேண்டி நின்னுடைய கோயில் திருமுன் நின்று வாழ்த்துபவ னாவேனோ? எ.று.
“குற்றமே செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை” ஆண்டவன் பால் காணப்படுதலால், அவனுடைய அடியராகிய தவத்தோரிடத்தும் அதுவே காணப்படுவது பற்றி, “குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும் நற்றவர்” என நவில்கின்றார். குற்றம் பொறுக்கும் கொள்கையை, “கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைபல செய்தேன்” (வடமுல்லை) என்று நம்பியாரூரர் கூறுவது காண்க. தவமுடைய சிவ ஞானிகள் உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டிருப்பவனாதலால் “நற்றவர் தம் உள்ள நடுநின்ற நம் பரனே” என மொழிகின்றார். “அகனமர்ந்த வன்பினராய் அறுபகை செற்றைம்புலனு மடக்கி ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளுறையும் புராணர்” (வீழி) என்று ஞானசம்பந்தர் உரைக்கின்றார். நம்பரன் - நம்முடைய பரமன்; மக்களினத்துக்கும் தேவர்க்கும் மேலாயவன் என்பது கருத்து. நம்பு அரன் எனக் கொண்டு விரும்பப்படும் அரன் என்று உரைத்தலும் ஒன்று. உற்றார்க் குறுதுணை என்றும், நற்றுணை யென்றும் சான்றோர் பலரும் கூறுபவாதலால், வள்ளலாரும் “உற்றார்க்கு நற்றுணைவா” என்று சிறப்பிக்கின்றார். சிந்தைக்கண் நின்று சென்னெறி காட்டி கருத்து நிறைவேறச் செய்தலின், “என் கருத்து முற்றிட” என்றும், சிந்தைக்கண் அவர் நிற்றல் வேண்டி அவர் திருக்கோயில் திருமுன் சென்று வாழ்த்தி வணங்குவது இன்றியமையாமையால், “நின் சன்னிதியின் முன்னின்று வாழ்த்தேனோ” என்றும் இசைக்கின்றார், “நெஞ்சமிது கண்டுகொள் உனக்கென நினைந்தார் வஞ்சம தறுத்தருளும் மற்றவனை” (நள்ளாறு) என்று ஞானசம்பந்தர் உரைப்பதறிக. மாணிக்கவாசகர், “முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிவாய்” (கோ.மூத்த) என்று முறையிடுவது காண்க.
இதனால், கருதிய கருத்து முடிய இறைவன் திருமுன் னின்று வாழ்த்த வேண்டு மெனத் தெரிவித்தவாறாம். (10)
|