961. வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.
உரை: வஞ்சிக்கும் இளமகளிர் மயக்குகின்ற மயக்கத்தினின்றும் நீங்குதல் வேண்டி விடக்கறையை அணியாகக் கொண்ட கழுத்தையுடைய நாதனே என்று பன்முறையும் சொல்லி உய்தி பெற்ற நன்மக்கள் வாழ்த்துகின்ற ஒற்றியூர் அப்பனே, உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிக்கண் அன்பு மிகுந்து போற்றுபவனாவேனோ? எ.று.
கூடலுறும் ஆடவருடன் இன்மொழி வழங்கிக் கூடியபின் வன்மொழிகளால் வைது விலக்கும் இயல்புபற்றிப் பொருட் பெண்டிரினத்து இளமகளிரை, “வஞ்சிக்கும் மடவார்” என்றும், கூடுமுன் தம்முடைய இனிக்கும் மொழியாலும் மகிழ்விக்கும் செயலாலும் ஆடவர் மனத்தில் காமக் களிப்புறுவித்து அறிவைக் கலக்குமாறு தோன்ற, “மயக்கும் மயக்”கென்றும், அம் மயக்குப் பிணிப்புக்குள் அகப்படாது, அறிவு தெளிவுற்று மனத்தைச் சிவன்பாற் செலுத்தி உய்ந்த சிவநெறிச் செல்வர்களை, “மயக்கொழிய நஞ்சமணி கண்டத்து நாதனே என்றென்று உஞ்சவர்கள்” என்றும் உரைக்கின்றார். உய்ந்தவர்கள், உஞ்சவர்கள் என்று வந்தது. “உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஏசாரோ” (அயோத். குகப்.) என்று கம்பர் கூறுவதறிக. உய்திபெற்ற சிவஞானச் செல்வர்கள் சிவபெருமான் திருவடியை வாழ்த்துகின்றது, மக்களிடையே வாழும் தம் மனம், “வேதனைபற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்களின்மேல் பழைய பயிற்சி வயத்தால்
செல்லுமன்றே.” (குறள். பரிமே) அங்ஙனம் செல்லாவாறு தற்காத்தற் பொருட்டு என அறிக. “பகர்ச்சி மடவார் பயில நோன்பாற்றல் திகழ்ச்சி தரும் நெஞ்சத்திட்பம்” (நன்னெறி. 23) எனத் துறைமங்கலம் சிவப் பிரகாச அடிகள் செப்புவது காண்க. நஞ்சுண்டமை விளங்கத் தோன்றிலும் அதன் கொடுமை யின்றானாற் போல மகளிர் மயக்கும் மயக்கவுரை செவியில் வீழினும் அதன் கொடுமை செயற்படாதொழிதற் பொருட்டு, “நஞ்சணி கண்டத்து நாதனே” எனப் பன்முறையும் மந்திரமாக ஓதுகின்றனர் என்ற கருத்துப் புலப்பட நஞ்சால் நிறமுற்ற கண்டத்தை விதந்து கூறுகிறார். உய்ந்தவர்க்குத் துணை செய்த திருவடி ஞானம் எனக்கும் எய்துதல் வேண்டுமென்ற விழைவால் அத்திருவடிக்கண்மிக்க அன்புற்று வாழ்த்தி வழிபட விரும்புகின்றேன் என்பார், “உன்னுடைய கஞ்ச மலரடிக்கே காதலுற்றுப் போற்றேனோ” என்று முறையிடுகின்றார். கஞ்சம் - தாமரை.
இதனால், மகளிர் மயக்கில் வீழாமல் உய்தல்வேண்டி உன்னுடைய திருவடியைப் போற்றுவது கடனாகிறது என்பதாம். (11)
|