962.

     இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
     துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
     உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றிஅப்பா என்வாய்உன்
     தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.

உரை:

     துன்பம் நிறைந்த இவ்வுலகின் இருள் செய்யும் நெறியில் நாடோறும் சேர்ந்தியலும் நெஞ்சின் துடுக்குச்செயல் தவிரும் பொருட்டு, நல்ல சிவஞானச் செல்வர்கள் சிந்திக்கப்பெறும் தெளிந்த அமுதம் போல்பவனே, ஒற்றியூர் அப்பனே, உன்னை அடைதற்குரிய திருவடியை என் வாயாற் பாடி நாத் தழும்பேறக் காண்பேனோ, கூறுக. எ.று.

     நிலையா வியல்பினால் வாழ்வார்க்குத் துன்பம் தருவதுபற்றி, “இன்னல் உலகம்” என்றும், அதனால் அவர்கள் உவர்த்துத் துறந் தொழியாவாறு இன்பம் பயந்து அறிவை மயக்குவது பற்றி, “இருள் நடை” என்றும், மயங்கும் அறிவு மனத்தைப் பொறி புலன்களின்மேற் செல்லாவாறு நெறிப்படுத்தும் நிறை யழிவதால், மனம் துள்ளிக் கண்ட விடமெல்லாம் பாய்ந்து துன்பம் எய்துவித்தலால், “நாடோறும் துன்ன வரும் நெஞ்சத் துடுக்கொழிய” என்றும் சொல்லுகின்றார். துன்னல் - நெருங்குதல். இறைவன் திருவடியைச் சிந்திக்க வூறும் ஞானவமுதத்தால் அறிவு தெளிவும் ஒளியும் வலியும் எய்தி நெஞ்சினைச் செந்நெறிக்கட் செலுத்துமாறு கண்டு, “நெஞ்சத் துடுக்கொழிய உன்னலுறும் தெள்ளமுதே” என்றும், சிவனடியைச் சிந்திக்கும் செயலுடையாரை, “நல்லோர்கள்” என்றும் சிறந்தெடுத்துச் செப்புகின்றார். இந்நிலையில் திருப்பெருகு சிவஞானத்தால் திருவடியே நினைந்து, அதனை யடைவதே செயற்பாலதென்பது தெளியப்படுதலால், திருவடி நினைவுற்று வாயால் நாத்தழும்பேற வேண்டும் என்ற ஆர்வம் எழுதலால் “உன் அடைவே என் வாய்பாடித் தழும்பேறக் காணேனோ” என்று சாற்றுகின்றார். “சடைக் கற்றையினாய், பிணி மேய்ந்திருந்த இருகாற் குரம்பை யிது நானுடையது இது பிரிந்தால், தருவாய் எனக்குன் திருவடிக் கீழோர் தலைமறைவே” (தனி. விருத்.) என திருநாவுக்கரசர் திருவடி யடைவு பொருளாகப் பாடுமாறு காண்க.

     இதனால், சிவபிரான் திருவடியடைவு பொருளா வாயார நாத்தழும் பேறப் பாடும் திறம் தெரிவித்தவாறாம்.

     (12)