963.

     பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
     கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
     ஒண்மணியே தேனேஎன் றொற்றிஅப்பா உன்தனைநான்
     பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.

உரை:

     ஒற்றியூர் என்னுடைய அப்பனே, உலகில் காணப்படும் பேதைப் பெண்களைப் பெண்மணியே என்று பாடுவதை விடுத்து, உன்னை என் கண்மணியே, கற்பகமே, கண்ணை நெற்றியிற் கொண்ட கரும்பே, ஒள்ளிய மணியே, தேனே என்று நான் பண் கலந்த பாட்டில் வைத்துப் பாடி பரவித் துதிப்பவ னாவேனோ, கூறுக. எ.று.

     வாழும் மனைக்கு அகத்தும் புறத்துமன்றி ஆண்களைப் போற் பரந்த எல்லையில் திரிந்து காண்பன கண்டும், கேட்பன கேட்டும் பெருகிய அறிவுடையரல்லராதலின் மகளிரைப் “பேதையர்” என்பது மரபு. முதுபெண்டிரினும் இளமகளிர் குறுகிய உலகறிவு படைத்தமையால் பேதைய ரென்பது இளமங்கையர்க்கே சிறப்பாக வழங்குகிறது. உலகியற் காட்சி யறிவினும் நூலறிவு வன்மை குறைந்த தாகலின், நக்கீரர் முதலியோர் “நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறி வென்பது பெரும் பேதைமைத்தே” என்றனர். இப்பேதை மகளிரைப் பாட்டுவல்ல புலவர்கள் “பெண்மணி”யெனப் புகழ்தலைக் கண்டு, அது நன்றன் றென்பார், “பெண்மணியே என்று உலகிற் பேதையரைப் பேசாது” என்றும், அதனினும் பாட்டியற் புலமைக்கு உறுதிப் பொருளாவது சிவனைப் பல்வகைச் செல்வ மொழிகளால் சிறப்பித்துப் பாடுவது என்பார், “என் கண்மணியே கற்பகமே கண் நுதலிற் கொள் கரும்பே ஒண் மணியே தேனே என்று உன்றனை நான் பண் மணஞ்செய் பாட்டிற் பரவித் துதியேனோ” என்றும் புகல்கின்றார். கண்ணினுள் உள்ள கருமணி கண்மணி; அது பார்வை தந்து அறிவை விளக்கும் இயல்புடையது. கற்பகம், தேவருலகத்து மரவகை. இதன் நீழலில் நின்று யாவர் யாது வேண்டினும் அவர்கட்கு அதனை அது நல்கும் என்று புராணிகர் கூறுவர். ஏனைக் கரும்புகளினின்றும் வேறு படுத்திக் காட்டற்குக் “கண் நுதலிற் கொள் கரும்” பென்று கூறுகின்றார். தின்ன வினிக்கும் கரும்புபோல் உண்ண வினிக்கும்ஒண்மை பற்றிச் சிவனைக் கரும்பென்றும், நெற்றியில் கண்ணொன்றையுடையவனாதலால் “கண் நுதலிற் கொள் கரும்பு” என்றும், ஏனைக் கரும்புகள் கணு என்ற பெயரால் அடிமுதல் நுனிவரைக் கண்ணுடையன; சிவக்கரும்பு நெற்றியிற் கண்ணுடைய தென்றும் குறிக்கின்றார். பணிகள் பலவும் ஒளியுடையவாயினும் ஞானவொளி செய்தலின்மையின், சிவமணியை ஒண்மணி என்கின்றார். இழுக்குடையதாயினும் இனிய இசை யமையுமாயின் நலம்பெறும் பான்மையால், “பண் மணஞ்செய் பாட்டு” என்று சிறப்பிக்கின்றார். “இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று” என்பர் ஒளவையார். பண்ணமைந்த பாட்டுக்குப் பரிவு நல்குபவனாதலின், “பண்மணஞ்செய் பாட்டிற் பரவித்துதியேனோ” என்று கூறுகின்றார். “பண் சுமந்த பாடற் பரிசு படைத் தருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான்” (அம்மானை) என மணிவாசகர் உரைப்பர். பாட்டிற் பரவுவது ஏனெனிற் கூறுதும்: தவயோகியின் உள்ளம் போல் பாட்டியற் புலவன் மனம், பாடப்படும் பொருள் நலத்திலும், அதனை யெடுத்துரைக்கும் சொற்றூய்மையிலும், அச் சொற்களை இனிய இசை பொருந்தத் தொடுக்கும் தொடை வனப்பிலும் நெடும்பொழுது தோய்ந்து, அலையில்லாத நீர் நிலைபோல் ஒளியுறுதலின், “பாட்டிற் பரவுவது” வேண்டப்படுகிறதென வுணர்க. இதுபற்றியே, கவியோகமும் தவயோகமே என்று சான்றோர் கூறினர்.

     இதனால், இறைவனைப் பண்ணமைந்த பாட்டிற் பரவித் துதிக்கும் விழைவு கூறியவாறாம்.

     (13)