964. மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ.
உரை: குற்றமில்லாதவராகிய சான்றோர் போற்றுகின்ற ஒற்றியூரப்பனே, நின்னுடைய திருவடியை வாழ்த்தி வணங்காத வன்மனம் உடையவர் பெருமையில்லாதவராவர்; கீழ்மையுடைய அவர்பாற் பன்முறையும் சென்று உள்ளமும் உடம்பும் தளர்ந்தேன்; அத்தளர்ச்சி நீங்க உன்னுடைய ஞான மயமான திருவடி நீழலை யடைந்து மகிழ்பவ னாவேனோ? எ.று.
ஊனம் - குற்றம். குற்றமில்லாத சான்றோர் சிவஞானப் பேறு குறித்துச் சிவன் திருவடியை வணங்குபவராதலின், “ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றியப்பா” என வுரைக்கின்றார். “ஊனமிலராகி யுயர் நற்றவ மெய் கற்றவை யுணர்ந்த அடியார், ஞானமிக நின்று தொழ நாளுமருள் செய்யவல நாதன்” (வைகா) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. அருளற வொழுக்கத்தால் மென்மை சான்ற மன முடையார்க்கே சிவபெருமான் திருவடியை நினைக்கும் சிந்தை யுண்டாமாதலின் அவர்களை “நின்றாள் வழுத்தாத வன்மனத்தார்” என்றும், அவர்கட்குப் பெருமையில்லை என்றற்கு “மானமிலார்” என்றும், அவர்கள்பால் இருப்பது கீழ்மையாதல் தோன்ற “ஈனர்” என்றும் இயம்புகின்றார். அவர்பால் அருட்செல்வம் இல்லையாயினும், மேலோர் கீழோரை யுள்ளிட்ட எல்லோரிடத்தும் பொருட்செல்வம் உளதாதல்பற்றி ஈனர்பாற் பொருள் வேண்டிப் பன்முறையும் சென்று மனமும் மெய்யும் சோர்ந்தமை புலப்பட, “ஈனரவர்பாற் போய் இளைத்தேன்” எனவும், இளைப்புத் தோன்றுங்கால் உடம்பில் வெம்மையும் மனத்திற் கொதிப்பும் தோன்றி வேர்த்தலால் அது தீர்த்தற்குத் தண்நிழல் வேண்டுதலின், “இளைப்பாற உன்னுடைய ஞான வடியின் நிழல் நண்ணி மகிழ்வேனோ” எனவும் இசைக்கின்றார். “மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே, ஈசன் எந்தை யிணையடி நீழலே” (தனி.குறுந்.) எனத் திருநாவுக்கரசர் தெரிவித்தலால், திருவடி இளைப்பாறற்கு ஏற்றவிடமாதல் காண்க. ஞானமே வடிவானவனாதலின் சிவன் திருவடியை, “ஞானவடி” என்று சிறப்பிக்கின்றார். “உத்தமர்க்கு ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச, ஆனையுரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே” (ஐயாறு) எனத் திருநாவுக்கரசர் கூறுவர்.
இதனால், சிவனது திருவடி நீழலின் இனிமை கூறியவாறு. (14)
|