965.

     கல்லார்க் கிதங்கூறிக் கற்பழிந்து நில்லாமல்
     எல்லார்க்கும் நல்லவனே என்அரசே நல்தருமம்
     ஒல்லார் புரமெரித்த ஒற்றிஅப்பா உன்அடிக்கே
     சொல்லால் மலர்தொடுத்துச் சூழ்ந்தணிந்து வாழேனோ.

உரை:

     மக்களினத்தில் எல்லார்க்கும் நல்லவனாக இருப்பவனே, என்னுடைய அரசே, நல்ல அறநெறியிற் பொருந்தாத அசுரருடைய முப்புரத்தை எரித்தொழித்த ஒற்றியூர் அப்பனே, கல்லாத மக்களிடம் சென்று இதமாகப் பேசிக் கற்ற சிறப்பை இழந்து வருந்தாமல் உன்னுடைய திருவடிக்கண் சொல்லால் மாலை தொடுத்தணிந்து வாழ்பவனாவேனோ? எ.று.

     நல்லனவெனச் சான்றோர் வகுத்த அறநெறியில் பொருந்தி வாழாமல் உலகிற்குத் தீது புரிந்தமையால் திரிபுரத் தசுரரை, “நற்றருமம் ஒல்லார்” என்றும், அவர்களுடைய மதில் சூழ்ந்த நகரத்தை எரித்துச் சாம்பராக்கியது குறித்துப் “புரம் எரித்த ஒற்றியப்பா” என்றும் கூறுகின்றார். நல்லார் தீயார், பரவுவார் பழிப்பார், கல்லார் கற்றார் என்ற வேறுபாடின்றி எல்லார்க்கும் தன் இன்னருள் நல்குவது பற்றி, “எல்லார்க்கும் நல்லவனே” எனவும், அருளாட்சி புரிவதால் “என்னரசே” எனவும் இயம்புகின்றார். கல்லாத கன்மனமுடைய கீழ்மக்களிடம் சென்று இனிய சொற்களால் நற்பொருளை நயமாகவுரைப்பினும் ஏலா தொழிகுவதன்றி, உரைப்பவருடைய கல்வி நலத்தையும் எள்ளி நகையாடுவராதலால், “கல்லார்க்கு இதம் கூறிக் கற்பழிந்து நில்லாமல்” என்று உரைக்கின்றார். “கல்லாவறிவிற் கயவர் பால் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணார்” என்று சான்றோர் கூறுவர். “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்பர் ஞானசம்பந்தர். கற்பு, ஈண்டுக் கல்வியாற் பெறப்படும் சிறப்புக் குறித்து நிற்கிறது. சொல்லால் மலர் தொடுத்து என்பது, மலரால் தொடுக்கப்படும் மாலை எனப் பொருள்தோன்ற நின்றது. மலர், ஆகு பெயர். சொன்மாலையைச் சூழ்ந்தணிதல் - சொன் மாலையை மனத்தால் எண்ணிப் பாடியணிதல். மலர் மாலையைச் சூழ்ந்தணிவது - மலர் மாலையை மார்பில் வளைய அணிவது.

     இதனால், சிவபிரான் திருவடிக்குச் சொல்மாலை தொடுத்தணியும் விருப்பத்தை விளம்பியவாறாம்.

     (15)