966.

     கற்பவற்றைக் கல்லாக் கடையரிடம் சென்றவர்முன்
     அற்பஅற்றைக் கூலிக் கலையும் அலைப்பொழிய
     உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
     நற்பதத்தை ஏத்திஅருள் நல்நலந்தான் நண்ணேனோ.

உரை:

     பிறவியைப் போக்குகின்ற ஒற்றியூரப்பனே, கற்க வேண்டியவற்றைக் கல்லாத கீழ்மக்களிடம் சென்று பணி செய்து அவர் தரும் அற்பக் கூலிக்காக அலைந்து படும் துன்பம் தவிர்க்க, உன்னுடைய நல்ல திருவடியைப் பரவிப் பெறும் திருவருள் நலத்தைப் பெறா தொழிவேனோ? எ.று.

     கற்க வேண்டியவற்றைக் கல்லாமையால், மனம் சுருங்கிக் கீழ்மையுற்றாரைக் “கடையர்” என்று பழிக்கின்றார். கடையரிடம் பணி செய்வோர்க்கு உரிய வளவினும் கூலி குறைவாகவே கொடுக்கப்படும் என்றற்கு “அற்பக்கூலி” எனவும், அதனையும் உடனே கொடாமல் பின்னை வா, நாளை வா என்று சொல்லிப் பணி செய்தாரை அலைப்பராதலின், “கடையரிடம் சென்றவர்முன் அற்ப அற்றைக் கூலிக்கு அலையும் அலைப்”பென்றும், அலையும் அவ்வருத்தம் இல்லாதொழிய வேண்டும் என்றற்கு, “அலையும் அலைப்பொழிய” என்றும் உரைக்கின்றார். அதற்குச் செய்யக் கடவது இறைவனுடைய திருவடியைப் பெறும் திருவருள் நலம் என்பாராய், “உன்னுடைய நற்பதத்தை ஏத்தியருள் நன்னலம்” எனவும், அதனை நான் பெறவேண்டும் என்றற்கு “நண்ணேனோ” எனவும் இசைக்கின்றார். நன்னலம் - மிக்க நலம். ஏத்தி என்பது செயவெனெச்சத் திரிபு.

     இதனால், கடையரிடம் சென்றலையும் அலைப் பொழிய இறைவன் திருவடியை, ஏத்தி நலம்பெற வேண்டிக் கொண்டவாறாம்.

     (16)