967.

     தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
     சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
     உந்தைஎன்போர் இல்லாத ஒற்றிஅப்பா உன்அடிக்கீழ்
     முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.

உரை:

     உன் தந்தை யென்று சொல்லப்படுவோர் இல்லாத ஒற்றியூரப்பனே, தந்தை தாய் மனைவி மக்கள் என்னும் இவர்கள் கூட்டத்தில் மனம் சென்று அவர்கள் படும் இடுக்கண்களால் திகைப்புண்டு அறிவு மயங்காமல், உன்னுடைய திருவடிக்கீழ்த் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் முதலியோர் போலக் கலந்திருந்து இன்புறுவேனோ? எ.று.

     பிறவா யாக்கைப் பெரியோனாதலின், சிவனுக்குத் தந்தையில்லை தாயில்லை என்பவாதலால், “உந்தை என்போர் இல்லாத ஒற்றியப்பா” என்று உரைக்கின்றார். “தந்தையாரொடு தாயிலர்” (பாசுரம்) என ஞான சம்பந்தரும் பிறரும் கூறுவர். உந்தை - உம்முடைய தந்தை. தாரம் என்பது பலபொரு ளொருசொல்லாதலின் மனைவி யென்றற்கு “மனைத்தாரம்” என்றும், இவர்களோடு கூடி யுறைதலால் உளவாகும் துன்பங்களைச் “சங்கடம்” என்றும், அவற்றை விலக்குதற் கண்ணும் போக்குதற்கண்ணும் மன நினைவு சென்று திகைத்தலால் “சிந்தை சென்று தியங்கி” என்றும், அறிவு தெளிவிழந்து மயங்குதலால் அது கூடாதென்றற்கு “மயங்காமே” என்றும் கூறுகின்றார். முந்தையோர் - முன்னோர், திருநாவுக்கரசரது திருவடிப் பேற்றை, “அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட வரசமர்ந்திருந்தார்” என்றும், ஞானசம்பந்தரது பேற்றினை, “போத நிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடனானார்” என்றும் சேக்கிழார் தெரிவிப்பதறிக. முயங்குதல் - கூடுதல்.

     இதனால், முந்தையோர் போலத் திருவடிக்கீழ்ப் பெறும் முயக்க மெய்த விழைந்தவாறாம்.

     (17)