968.

     பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்று பேசாத
     வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலானேன்
     உய்என் றருள்ஈயும் ஒற்றிஅப்பா உன்னுடைய
     மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ.

உரை:

     உய்க என்று திருவருள் புரியும் ஒற்றியூரப்பனே, பொய்யொன்றையே பேசுவதன்றி அதற்குப் புறம்பாக ஒன்றும் பேசுதல் இல்லாத வசை பொருந்திய தீநாற்றம் நாறும் வாயுடையாரின் மிக்கவனாகிய யான் உன்னுடைய திருமேனியில் உள்ள திருநீற்றின் விளக்கத்தைப் பார்ப்பவனாவேனோ? எ.று.

     பேரருளாளன் எனப்படுதலால் தன்னை வேண்டினார்க்கு இதனைப் பெற்று உய்க என்று அருள் வழங்குவது தோன்ற, “உய்யென்று அருள் ஈயும் ஒற்றியப்பா” என உரைக்கின்றார். பேச்சினால் செய்யப்படுங் குற்றங்களுள் பொய்யினும் பெரியது பிறிதின்மையின், “பொய்யொன்றே யன்றிப் புறம்பொன்றும் பேசாத வையொன்றும் தீநாற்ற வாயார்” என உரைக்கின்றார். பயனில மொழிதல், வன்சொல் வழங்குதல், புறம் பேசுதல் முதலாய பல குற்றங்கள் உளவாதலின், அவற்றைப் பொய்யுரைக்குப் புறம்பாயவை என ஒதுக்குகின்றார். வை - வசை மொழி. பிறரை வைதுரைப்பதை இயல்பாக வுடையவர்களை “வை யொன்றும் வாயார்” என்றும், நறுமணமில்லாத வாய் என்பார், “தீ நாற்ற வாயார்” என்றும் இகழ்கின்றார். மேல் என்பது, ஈண்டு மிகுதிப் பொருட்டாய் மிக்கவன் என்று பொருள்பட நின்றது. சிவனுடைய செம்மேனியில் பால் போலும் வெண்ணீறு கிடந்து வெண்மையான ஒளி செய்து காண்பார்க்கு இனிமையாக இருத்தலின், “உன்னுடைய மெய்யொன்று நீற்றின் விளக்கமது பாரேனோ” என ஏங்குகின்றார். “காணவினியது நீறு” என்றும், “இன்பம் தருவது நீறு” என்றும் திருஞானசம்பந்தர் சிறப்பித்துரைப்பது காண்க.

     இதனால், திருநீற்றின் விளக்கம் காண வெழுந்த விருப்பம் தெரிவித்தவாறு.

     (18)