969.

     தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
     ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
     ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றிஅப்பா நின்அடிக்கீழ்
     நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ.

உரை:

     ஊக்கமுடைய சான்றோர் வழிபடுகிற ஒற்றியூரப்பனே, தூங்குவதும், முன்னே தூங்கிப்பின்னே வயிற்றுக்குச் சோறில்லையே என்று உண்டாகின்ற ஏக்கமுறுவதுமன்றி வேறு வழியால் ஏங்குவதில்லாத ஏழையாகிய யான் உன்னுடைய திருவடிக்கீழ் நீக்கமின்றியிருந்து பெறும் சிவானந்த நித்திரை கொள்வேனோ? எ.று.

     உழைத்துண்டு இனிதுறங்கும் உறக்கமின்றிச் சோம்பித் தூங்கும் தூக்கம் என்றற்குத் “தூக்கம்” என்றும், அதனால் பசிக்கு உணவின்மையெண்ணி வருந்தும் நிலையை, “முன் தூங்கியபின் சோறிலையே என்னும் அந்த ஏக்கம்” என்றும் கூறுகின்றார். தூங்குதற்கு முன் சோற்றுக்கு வேண்டுவன எண்ணாமையும், தூங்கியெழுந்து சோறில்லாமை கண்டு வருந்துவதும், நல்லறிவில்லாத வறியவர் செயலாதலின், தூக்கமும் ஏக்கமுமன்றி “மற்றோர் ஏக்கமிலா ஏழையேன்” என மொழிகின்றார். ஏனை, உடை, உறையுள், மருந்து முதலியன நினையாமல் விலங்கினும் கடையனாயினேன் என்றாராயிற்று. உள்ளத்தால் உயர்ந்தோர் போற்றிப் பரவுகின்ற ஒற்றியூர் அப்பன் என்பார், “ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றியப்பா” என்று சிறப்பிக்கின்றார். ஊக்கம் உள்ளோர் - உயர்வுள்ளும் நல்லோர். தூக்கம் என்பது, நனவு நிலைக்கும் கனவு நிலைக்கும் இடைநிலை. இந்நிலையில் உயிருணர்வு புருவ நடுவுக்கும் கழுத்துக்கும் இடையில் இறங்குவதும் ஏறுவதுமாக அசைவதால் (தூங்குவதால்) தூக்கம் எனப்படுகிறது. கழுத்திற்குக் கீழ் மார்பின்கண் உணர்வு தங்குவது உறக்கமாம். இதனைச் சுழுத்திநிலை என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை அடுப்பன துயிலுதலும் துஞ்சுதலுமாகும். இவற்றைத் துரியமென்றும் அதீதமென்றும் சைவ நூல்கள் குறிக்கின்றன. இறைவன் திருவடிக் கீழ் அடையும்போது, நனவு, கனவு, சுழுத்தி, துரியம், அதீதம் என்ற நிலைகட்கு இறங்குவதும், அவற்றினின்றும் ஏறுவதுமாகிய அவத்தைக்கு இடமாகிய உடம்பு நீங்கிச் சிவானந்த ஞான வுடம்பு எய்திச் சிவ போகத்தில் ஆன்ம உணர்வு ஒன்றியுடனாதலை, “நின்னடிக் கீழ் நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ” என்று இயம்புகின்றார். ஒன்றியுடனாதலைச் சைவநூல்கள் “சுத்தாத்துவிதம்” என்று சொல்லுகின்றன. “நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்” (பெரிய. திருநாவுக்.) என்று சேக்கிழார் பெருமான் உரைப்பது காண்க. சுத்தாத்துவிதத்தை வடலூர் வள்ளல் “சிவானந்த நித்திரை” என்று தெரிவிக்கின்றார். நித்திரை - செயலின்மை.

     இதனால், சிவன் திருவடிக்கீழ்ப் பெறும் ஆனந்தப்பேறு கூறியவாறு.

     (19)