97.

    கையாத அன்புடையார் அங்கை மேவும்
        கனியே யென்னுயிரே யென்கண்ணே யென்றும்
    பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
        பொருளேநின் பொன்னருளிப் போதியான் பெற்றால்
    உய்யாத குறையுண்டோ துயர் சொல்லாமல்
        ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போமென்
    ஐயாநின் அடியரொடு வாழ்கு வேனிங்
        காருனையல்லா லெனக்கின் றருள்செய்வாயே.

உரை:

     திருத்தணிகையில் மேவும் மெய்ஞ்ஞானப் பொருளாயுள்ளவனே, குறையாத அன்புடைய பெருமக்கட்கு அங்கைக் கனி போல் அருள்பவனே, எனக்கு உயிராகியவனே, என் கண் போன்றவனே, எந்நாளும் பொய்படுதலில்லாத பூரணப்பொருளே, நினது பொன் போன்ற திருவருள் இப்போது எனக்கு எய்துமாயின் யான் உய்தி பெறுதற்கு ஒரு குறையுமில்லையாம்; என்னைப் பற்றி வருத்தும் துயரம் சொல்லாமல் நீங்கி விடும்; சாகும் துன்பமும் தேய்ந்து கெடும்; ஐயனே, யானும் நினக்கு அடியராயினாரோடு கூடி வாழ்வேன்; எனக்கு இவ்வுலகில் உன்னை யொழியப் பற்றுக் கோடாகுவோர் யாவருளர்? இப்போது எனக்கு அருள் புரிந்து சொல்லுக, எ. று.

     மெய்ந்நூல்கள் உணர்த்தும் மெய்ப் பொருள் முருகப் பெருமான் என்பதுணர்த்தற்கு “ஞானப் பொருளே” என்று கூறுகின்றார். பெறலருமை பற்றித் திருவருளைப் “பொன்னருள்” எனப் புகழ்கின்றார். திருவருள் கைவரப் பெற்றோர் பிறவிச் சூழலினின்றும் - உய்தி பெறுவது உறுதியாதலால், “திருவருளை இப்போது யான் பெற்றால் உய்யாத குறை யுண்டோ” என்று கூறுகின்றார். உய்யாத குறை உய்தி பெறாமைக்கு ஏதுவாகும் குறை. துயர்-மண்ணுலகில் வாழ்வார்க்குண்டாகும் துன்பம். யமன்பாசம் - இயமன் உயிரைப் பற்றற்குக் கையாளும் கயிறு. ஓய்தல்-நுணுகியறுதல். அதாவது மரண வேதனை யில்லையாம் என்பது. வாழ்க்கைத் துன்பமும் மரண பயமும் இன்றி வாழ்வதாவது, அடியாராகிய மெய்ஞ்ஞானிகளோடு கூடி வாழ்வது; அதனை நினைந்தே “நின் அடியாரொடு வாழ்குவேன்” என வுரைக்கின்றார். “புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன் கலந்து பண்பு பெற அஞ்சல் அஞ்சல் என வாராய்” (திருப்பு. 364) என்று அருணகிரியார் ஓதுகின்றார். நீயும் நின்னடியாருமல்லது பற்றுக் கோடாவார் பிறர் எவரும் இல்லை என்று உணர்ந்து கொண்டேன் என்றற்கு “இங்கு ஆர்உனையல்லால் எனக்கு இன்று அருள்வாய்” என உரைக்கின்றார். கையாத அன்பு - சிறுகுதல் இல்லாத அன்பு. குறைவிலா நிறைவே என்பது பொய்யாத பூரணமே எனப்படுகிறது. பொய்த்தல், ஈண்டுக் குறைதல்.

     இதனால், திருவருள் கைவரப் பெற்றால் வாழ்க்கைத் துன்பமும் மரண வேதனையும் இல்லையாம் என்று தெரிவித்தவாறாம்.

     (5)