970. வாதுபுரிந் தீன மடவார் மதித்திடுவான்
போதுநிதம் போக்கிப் புலம்பும் புலைநாயேன்
ஓதுமறை யோர்குலவும் ஒற்றிஅப்பா ஊரனுக்காத்
தூதுசென்ற நின்தாள் துணைப்புகழைப் பாடேனோ.
உரை: வேதங்களை யோதும் வேதியர்கள் கூடியிருக்கும் ஒற்றியூர் அப்பனே, கீழ்மைச் செயலை யுடைய மகளிரின் மதிப்பைப் பெறும் பொருட்டுப் பிறரோடு நாளும் வாது பேசிப் பொழுதுபோக்கித் தனித்தலையும் புலைத்தன்மையுடைய நாய் போன்ற யான், நம்பி ஆரூரர் பொருட்டுத் தூது நடந்த நின்னுடைய இரண்டாகிய திருவடிகளைப் பாடா தொழிகுவேனோ? எ.று.
மறை யென்பது வேதங்களையும் ஆகமங்களையும் குறிக்கும் பொதுச் சொல்லாதலின், பல தெய்வக் கொள்கையுடையதாய் வேதியர்களால் நாளும் ஓதப்படும் வேதத்தை “ஓதும் மறை” என்றும், ஓதுபவரை, “ஓதும் மறையோர்” என்றும் உரைக்கின்றார். முப்போதும் மறையோதும் முறையால் சூழ்ந்துறைவது நோக்கி, “ஓது மறையோர் குலவும் ஒற்றியப்பா” என்று சிறப்பிக்கின்றார். குலமகளிரின் வேறுபடுத்தற்கு வரைவில் மகளிரை, “ஈனமடவார்” என்றும், அவரிடையே யிருக்கும் தம்முடைய சொல்வன்மை கண்டு தம்மை அவர்கள் வியந்து மதித்தலை யெண்ணி வருவாருடன் வாது பேசியே காலம் கழிப்பது தோன்ற, “ஈன மடவார் மதித்திடுவான் வாது புரிந்து நிதம் போது போக்கி” என்றும், அதனால் தமக்கு நண்பர் இலராதலால் தனிமையுறுவது புலப்பட, “புலம்பும்” என்றும், புலைத்தன்மையால் பிற நாய்கட் கஞ்சி ஓரிடத்தும் நில்லாது அலையும் நாய்போல் நானும் திரிந்தலைந்தேன் என்றற்குப் “புலை நாயேன்” என்றும் புகல்கின்றார். நம்பியாரூரர்க்கு ஊரன் என்பதும் பெயர். “நாடெலாம் புகழ் நாவலூராளி நம்பி வன் றொண்டன் ஊரன்” (திணைநகர்.) என்று அவர் தாமே கூறுவது காண்க. திருவாரூரில் சிவன் அவர் பொருட்டுப் பரவையார் மனைக்கு இரவில் தூது சென்று வரலாற்றை நினைந்து, “ஊரனுக்காத் தூது சென்ற நின்றாள்” என்று பரவுகின்றார்.
இதனால், சுந்தரர்க்காகச் சிவன் தூது சென்ற எளிமை நினைந்து வியந்தவாறாம். (20)
|