971.

     பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
     மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
     உன்னாசை கொண்டேஎன் ஒற்றிஅப்பா நான்மகிழ்ந்துன்
     மின்னாரும் பொன்மேனி வெண்ணீற்றைப் பாரேனோ.

உரை:

     என் ஒற்றியூர் அப்பனே, பொன்னாசையையும் புலால் நாறும் மங்கையர்மேல் பேராசையாய் நிலைபெறும் ஆசையையும், நிலைபெறுகின்ற மண்ணாசையையும் பற்றற நீக்கி உன்பால் ஆசை கொண்டு மனம் மகிழ்ந்து உனது மின்னொளி விளங்கும் பொன்போன்ற மேனிமேல் அணிந்துள்ள வெண்ணீற்றழகைப் பாராதிருப்பேனோ? எ.று.

     புலால் நாறும் உடம்புடையராதலின் மகளிரைப் புலைச்சியர் என்றும் அவர்மேல் உண்டாகும் மிக்க ஆசையைப் “பேராசை” யென்றும் முதுமையுறினும் நெஞ்சில் நிற்குமாறு பற்றி “மன்னாசை”யென்றும் உயிர் போகுமளவும் மண்ணாசை விடாதிருப்பது நோக்கி “மன்னுகின்ற மண்ணாசை”யென்றும் கூறுகின்றார். “பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன், என்னை நாடிய வென்னுயிர் நாதனே” என்று தாயுமானார் கூறுவது காண்க. மின்போல் ஒளியும் பொன்போல் மேனியும் உடையனாதலாற் சிவபிரான் திருமேனியை, “மின்னாரும் பொன் மேனி” என்றும், அதன்மேற் கிடந்து அழகு செய்தலின், “வெண்ணீற்றைப் பாரேனோ” என்றும் பரவுகின்றார். “செய்ய மேனி வெளிய பொடி பூசுவர்” (புகலூர்) என ஞானசம்பந்தர் பாடுவர்.

     இதனால், சிவன் திருமேனியில் உள்ள வெண்ணீற்றின் பொலிவு சிறப்பித்தவாறு.

     (21)