972. கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
உள்உண்ட தெள்அமுதே ஒற்றிஅப்பா உன்தனைநான்
வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
உரை: அன்பராயினார் உள்ளத்தால் உண்ணப்படுகின்ற தெளிந்த அமுதம் போல்பவனே, ஒற்றியூர் அப்பனே, கள்ளைக் குடித்த நாய்போல் மிக்க காமமாகிய வெள்ளத்தை யுண்டு நெறியின்றித் துள்ளுகின்ற நெஞ்சின் துடுக்கான செயல்களை யடக்கி வெண்மை நிறமுடைய நந்தியாகிய எருதின்மேல் நீ ஏறி வரும் காட்சியை நான் காணாதொழிவேனோ. எ.று.
சிவத்தின் திருவருள் தன்னைச் சிந்திக்கும் ஞானிகளின் உள்ளத்தில் தெளிந்த அமுதம் போற் பெருகிப் பாய்ந்து இன்பம் செய்வதுபற்றி, “அன்பர்கள்தம் உள்ளுண்ட தெள்ளமுதே” என வுரைக்கின்றார். “ஞானம் ஈசன்பால் அன்பே” என்றனர் ஞானமுண்டார் (ஞானசம்.) எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்பதால், அன்ப ரென்பது ஞான முடையார் மேலதாயிற்று. திருவருளின்பம் உள்ளத்தால் உணரப் படுவது கொண்டு “உள்ளுண்ட தெள்ளமுதே” எனச் செப்புகின்றார். கள்ளுண்டு வெறியேறிய நாய் கள்ளிருக்கும் இடத்தையே சுற்றிக் கிடப்பதுபோல், காமக்களிப்பில் வெறிகொண்ட நான் வெள்ளம்போற் பெருகும் காமவின்பம் நயந்து காம மங்கையர் சூழலிலே கிடக்கின்றேன் என்பாராய், “கடுங்காம வெள்ளமுண்டு துள்ளுண்ட நெஞ்ச முடையனாயினேன்” என்று கூறுகின்றார். கடுங்காமம் - மிக்க காமம். கடுமை, மிகுதி மேற்று. மேன்மேலும் காமத்தை வெள்ளம் என்றலின், “காம நுகர்ச்சியை வெள்ளமுண்டு” எனவும், கண்ட மகளிர்பாற் கருத்துப் பாய்ந்து அவருடைய கலவி குறித்து எதனையும் ஆராயாது செய்யத் துடிப்பது தெரிவிக்கத் “துள்ளுண்ட நெஞ்சத் துடுக்கு” எனவும், அதனை மீளத் தலையெடாவாறு அடக்கி யொடுக்கினாலன்றிச் சிவக்காட்சி பெறுதல் இல்லையாதலால், நெஞ்சத் துடுக்கடக்கி உன்றனை நான் விடை மீதில் காணேனோ” எனவும் எடுத்துரைக்கின்றார். சிவத்தைக் காண்டற்கும், மகளிரை நுகர்தற்கும் நெஞ்சு ஒன்றேயாதலின் நெஞ்சை யடக்குவதை முற்பட மொழிகின்றார். வெண்மை - ஈறுகெட்டு வெள்ளென நின்றது. “நரை வெள்ளேறு ஒன்றுடையானை” (சிராப்.) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. சிவனுக்கும் சிவன் ஊர்தியாகிய ஏற்றுக்கும், சிவகணத் தலைவர்க்கும் நந்தியெனப் பெயர் வழங்குவராதலின் “நந்தி விடை” என நவில்கின்றார்.
இதனால், நெஞ்சின் துடுக்கடக்கினால் சிவனை விடைமேல் தோன்றக் காணலாம் எனக் கூறியவாறாம். (22)
|