973.

     பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
     வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
     ஓராதார்க் கெட்டாத ஒற்றியப்பா உன்னுடைய
     நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ.

உரை:

     பரம்பொருளென உணராதவர்களின் உணர்வுக்கெட்டாத ஒற்றியூரப்பனே, நீங்காத காமநோயால் வருந்தும் நெஞ்சினையுடைய நான், எளிதில் வருதலில்லாத சிவானந்த வாழ்வு எய்தப் பெற்று வாழ்தற் பொருட்டு உன்னுடைய கங்கையாறு பொருந்திய சடைமேல் விளங்கும் பிறைத் திங்களின் ஒளியைக் காண்பவனாவேனோ? எ.று.

     நுகருந்தோறும் புத்தின்பம் தந்து நுகர்விக்குமாற்றால் மகளிரொடு பிணித்து நோயுறுவித்தலின் “பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்” என்று கூறுகின்றார். வஞ்சன், வஞ்சகன் என வருதல் போல் நெஞ்சனென்பது நெஞ்சகன் என வந்தது. திருவருள் ஞானப்பேற்றாலன்றிச் சிவானந்த வாழ்வு எய்துதல் அரிதென்பதால், “வாராத ஆனந்த வாழ்வு” என மொழிகின்றார். சிவனருளால் வளரும் பிறையாதலின், அதன் ஒளி தம்முள் சிவ ஞானவொளி தோன்றி வளர்தற் காதரவாம் என்னும் ஆர்வத்தால், “சடைமேல் நிலவொளியைக் காணேனோ” என்று கூறுகின்றார். “வார் சடைமேல் வளரும் பிறையுடையாய்” (நெடுங்.) என்று ஞானசம்பந்தர் பேசுவது காண்க.

     இதனால், சிவன் சடை மேலுள்ள பிறைத் திங்களின் சிறப்புத் தெரிவித்தவாறாம்.

     (23)