974. வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ.
உரை: அன்புற்று நெகிழ்ந்து உருகி நினைக்கும் நெஞ்சின்கண் தங்குகின்ற ஒற்றியூர் அப்பனே, வன்மை பொருந்திய மனத்தையுடைய பேதைமையுற்ற இளமகளிர் பொருட்டு வலியழிந்து வருந்தும் கல்லொத்த நெஞ்சினையுடைய பாவியாகிய யான், உனது வெல்லும் நஞ்சணிந்த கழுத்தை மிகவும் மகிழ்ந்து வாழ்த்துபவனாவேனோ? எ.று.
காதல் - பேரன்பு. காதலுற்றவிடத்து நெஞ்சு மென்மையிற்றுப் பன்முறையும் நினைப்பதால் நெகிழ்வுகொண்டு உருகிக் காதலிக்கப்பட்ட சிவனது திருவுருவை உள்ளத்தில் ஏற்று அதனையே உன்னிய வண்ணமிருத்தலால் “காதலித்து நெக்குருகி உன்னெஞ்சத் துள்ளுறையும் ஒற்றியப்பா” என்று உரைக்கின்றார். “காதலித் தேத்திய மெல்லினத்தார் பக்கல் மேவினர்” என ஞானசம்பந்தர் உரைப்பர். உன்னெஞ்சம் - உன்னும் நெஞ்சம். உன்னுதல் - ஊன்றி நினைத்தல்.இரக்கமின்றி வெறுத்துப் போக்குவதால் பொருட் பெண்டிரை “வன்னெஞ்ச மடவார்” என்றும், பிறர் படும் துன்பமறியாமையால் “பேதை மடவார்” என்றும், பலகாலும் மறுப்பினும் விடாதுவெறுத்து நீக்கும் வலியிழந்து அலைந்தமை புலப்பட, “அழிந்தலையும்” என்றும் மான வுணர்வு புக மாட்டாத திண்மை கண்டு “கன்னெஞ்சப் பாவியன்யான்” என்றும் கடிந்துரைக்கின்றார். நஞ்சின் கொல்லுந்தன்மை சிவன் பால் தோற்றொழிந்தமையால் “வென்னெஞ்சு” எனவும், அந் நஞ்சினைத் தன்னகத்தே அணியாகக் கொண்ட சிவனது அருணலத்தை யுலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கும் சிறப்பினால், “நஞ்சணி மிடறு” எனவும், அச்செயல்பற்றி அதனைத் திருநீலகண்டம் என வாழ்த்துவது மரபாதலால், “அணி மிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ” எனவும் இயம்புகின்றார்.
இதனால், சிவனது மணிமிடற்றை வாழ்த்தும் விருப்பம் தெரிவித்தவாறு. (24)
|