975. புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடியில் கொள்ளேனோ.
உரை: உள்ளத்தில் ஒளிரும் ஞானவொளி மயமாயவனே, ஒற்றியூரப்பனே, ஒருபோதும் நல்வினையே செய்தறியாத பொய்யனாகியயான் எண்ணிய எண்ணம் தடையின்றிப் பெறற்கு உன்னுடைய குளிர்ந்த தாமரை போலும் அழகிய திருவடியை என் தலையிற் சூடிக் கொள்பவனாவேனோ? எ.று.
நினைந்துருகும் அன்பர் உள்ளத்தில் திருவருளை ஞானவொளி பரப்பும் பெருமானாதல் பற்றி, சிவபெருமானை “உண்ணிலவு நல்லொளியே” எனப் புகழ்கின்றார். திருஞான சம்பந்தரும் “உருகுவார் உள்ளத்தொண் சுடர், தனக்கென்றும் அன்பராம் அடியார்கள் பருகும் ஆரமுது” (கோட்டூர்) என்று கூறுவது காண்க. புண்ணியம் - நல்வினை. நற்செயல் ஒன்றும் ஒரு காலத்தும் செய்யாமற் பொய்யே சொல்லி வாழ்ந்தேன் என்பார், “புண்ணியம் ஓர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்” என்று கூறி, கருதுபவர் கருத்து முடியும் பொருட்டுச் சிவன் திருவடியைப் பரவுவது மரபாதலின், “எண்ணியதோர் எண்ணம் இடரின்றி முற்றியிட” என மொழிகின்றார். “மன நினைவது முடிபெற நணி தொழு தெழு” (கழுமலம்) என ஞானசம்பந்தரும் உரைப்பர். தண்ணீரில் பிறந்து வளரும் தாமரையின் பூ இயல்பிலேயே தண்ணிதாகலின், “தண்ணிலவு தாமரை” யென்றும், தாமரைப் பூப்போலும் தட்பமும் பொற்பும் உடைமை நினைந்து சிவன் திருவடியைத் “தாமரைப் பொற்றாள்” என்றும் புனைந்துரைக்கின்றார். பூவைத் தலையிற் சூடுவது போலத் திருவடித் தாமரையினை முடியில் அணிந்துகொள்ள வேண்டும்என்பாராய், “முடியிற் கொள்ளேனோ” என வுரைக்கின்றார். இறைவன் திருவடியைத் தம் சிந்தையிலும் சென்னியிலும் கொண்ட அடியார் நடுவுள் இருக்கும் அருள் கிடைக்குமாயின், என் கருத்தும் இடர் சிறிதுமின்றி முடியும் என்ற கருத்தே தோன்ற, “அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம், முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே” (கோயி. மூத்.) என மாணிக்கவாசகரும் விளம்புகின்றார்.
இதனால், எண்ணிய எண்ணம் நிறைவுறற்கு சிவன் திருவடி முடியில் கொள்ளல் வேண்டும் என்பதாம். (25)
|