976. நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக்
கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான்
ஒன்றுமனத் துள்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ.
உரை: சிவன்பால் ஒன்றிய மனமுடையார் உள்ளத்தில் தோன்றும் ஞானவொளியே, ஒற்றியூர் அப்பனே, நன்னெறியைக் கண்டு இது நல்லது என உணர்ந்தும் மேற்கொள்ளாமல் அதனை அயித்து, தீயதை நன்றெனக் குறிக்கொள்ளும் கொடுமையுடையவனாகிய நான், உன்னுடைய வெற்றிப் படையாகிய மழுவின் மேன்மையை வியந்து பாடுபவனாவேனோ? எ.று.
பன்னெறியிற் சென்று அலையும் இயல்புடைய மனத்தை நிறுத்திச் சிவன்பால் ஒருமையுற்று நிற்பிக்குமிடத்து அது “ஒன்று மனம்” என்றும், அப்போது அலையில்லாத குடத்து நீர்போல் ஒளி திகழ நிற்கையால் அதன்கண் சிவத்தின் ஞானவொளி விளங்கக் காணப்படுவது நினைந்து, “ஒன்று மனத்து உள்ளொளியே” என்றும் உரைக்கின்றார். நன்னெறியின் நன்மை நன்கு தெளிந்துணர்ந்தவுடன் அதனை மேற்கொள்வது முறையாகவும், கொள்ளாத குற்றத்தை “நன்றிது என்று ஓர்ந்தும் நாடாது” எனவும், அதனோடு நில்லாமல் அந்நன்னெறியை அழித்துத் தீயதைக் கைக்கொண்டு இது நல்லது என வற்புறுத்தும் கொடுமை தன்பால் இருப்பதாக வுரைத்தலால், “நன்னெறியைக் கொன்று இது நன்று என்னக் குறிக்கும் கொடியவன் யான்” எனவும் இயம்புகின்றார். நன்னெறியை அழிப்பதும், தீநெறியை நன்றென்பதும் கொடியோர் செயல் என அறிக. எங்கும் என்றும் எவர்பாலும் தோல்வி கண்டதில்லையாதலால், அவனுடைய மழுப்படை “வென்றி மழுப்படை” எனப்படுகிறது. படையின் வெற்றி உடையானுக் குரியதாகலின், “மழுப்படையின் மேன்மையினைப் பாடேனோ” என்கின்றார்.
இதனால், சிவன் ஏந்தும் மழுப்படையின் மேன்மை பாட விரும்பியவாறாம். (26)
|