977.

     மண்கிடந்த வாழ்வின் மதிமயக்கும் மங்கையரால்
     புண்கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம்அற
     ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றியப்பா நாரணன்தன்
     கண்கிடந்த சேவடியின் காட்சிதனைக் காணேனோ.

உரை:

     ஒள்ளிய சூலப்படையை யுடைய ஒற்றியூரப்பனே! மண்ணுலகில் நடத்துகின்ற வாழ்க்கையில் மதியை மயக்கி வருத்தும் மகளிரால் மனம் புண்கொண்டு வருந்தும் கீழ்மகனாகிய எனது மன நோய் கெடுதற்குத் திருமால் தம் கண்ணையிட்டு வழிபட்ட சேவடியைக் கண்டு மகிழும் காட்சியைப் பெறுவேனாவேனோ? எ.று.

     சூலப்படைக்கு முத்தலை வேல் என்பதும் பெயர். ஒரு காம்பின் தலையில் மூன்று வேல் பொருத்தப்பட்டிருத்தலால் இப்பெயர் உண்டாயிற்று. ஒளி விளங்கத் தீட்டப்பட்டிருப்பது பற்றி, “ஒண் கிடந்த முத்தலை வேல்” என்று மொழிகின்றார். மண்ணுலக வாழ்வு “மண் கிடந்த வாழ்வு” எனப்படுகிறது. காமக் கலவிக்குரிய செயல்வகைகளால் ஆடவர்களின் அறிவு மயங்கச் செய்யும் செய்தி நோக்கி “மதி மயக்கும் மங்கையர்” என்று கூறுகின்றார். அறிவு மயங்குமிடத்து ஆகாதன செய்து குற்றப் படுதலும், பின்பு அதனால் துன்புறுதலும், மிக்க காமத்தால் நோயுற்று வருந்துதலும் எண்ணி நெஞ்சம் புண்ணாதலின், “புண் கிடந்த நெஞ்சப் புலையேன்” என்று புகல்கின்றார். காமக்கூட்டத்தின் மிகுதி கருதிப் புலாலுண்டலும் கள்ளருந்துதலும் உண்மையால், “புலையேன்” எனக் கூறுகிறார். புலால் உண்பாரைப் புலையர் என்பர் திருமூலர். புழுக்கம், ஈண்டு மனநோய் மேற்று. ஆயிரம் பூக்களைக் கொண்டு சிவனை அருச்சித்த நாராயணன், ஒன்று குறையவே, மலர் போன்ற தன் கண்களில் ஒன்றை இடந்து சிவன் சேவடியில் பெய்து வழிபட்டுச் சக்கரப் படை பெற்றான் என்று சான்றோர் கூறுகின்றனர். “நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு, ஏற்றுழி யொரு நாள் ஒன்று குறையக் கண் நிறையவிட்ட ஆற்றலுக் காழி நல்கி அவன் கொணர்ந்திழிச்சுங் கோயில்” (வீழி) என்று திருநாவுக்கரசரும், “திருமகள் கோன் நெடுமால் பலநாள் சிறப்பாகிய பூசனை செய்பொழுதில், ஒருமலர் ஆயிரத்திற் குறைவா னிறைவாக ஓர்கண் மலர் சூட்டலுமே, பொருவிறலாழிபுரிந் தளித்தீர்” (புத்தூர்) என்று நம்பியாரூரரும் உரைப்பது காண்க. இவ்வரலாற்றை நினைவிற் கொண்டே வள்ளற் பெருமான், சிவன் திருவடியை, “நாரணன் தன் கண் கிடந்த சேவடி” என்று பரவுகின்றார்.

     இதனால், திருமால் கண்ணிடந்து அருச்சித்த சேவடியின் சிறப்புப் பாராட்டியவாறு.

     (27)