978. கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா நீஉலகை
ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனா.
உரை: எவ்வுயிர்க்கும் செய்வினைப் பயனை நுகர்விக்கும் வகையில் தாயாகிய ஒற்றியூரப்பனே, நமன் வந்து உடற்குள் விக்குள் மேல் வர உயிரை வருத்திக் கொண்டு செல்லும் காலம் வரும் முன்பே நீ உலகுயிர்களை ஆட்டி வைக்கும் சிற்றம்பலத் திருநடனத்தைப் பார்ப்பேனாவனோ? எ.று.
உலகில் எல்லா வுயிர்களும் வினை செய்கின்றனவாதலால் அவ் வினைக்கண் விளையும் பயன்கள் தம்மைச் செய்முதலைத் தாமே சென்றடையும் அறிவில்லாதனவாதல் பற்றி, பயனைக் கூட்டிச் செய் முதலை நுகர்விக்கும் வகையில் இறைவன் தாய்போல் தலையளித்தல் விளங்க, “எவ்வுயிர்க்கும் ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா” என்று உரைக்கின்றார். “வள்ளலவன், செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யேபோல் செய்வன் செயல் அணையா சென்று” என்றும், “அவ்வினையைப், பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல், ஆர்தாம் அறிந்தணைப்பார் ஆங்கு” என்றும் சிவஞான போதம் கூறுவது காண்க. இவ்வாற்றால் உயிர்கள் வினைப்பயனை நுகர்ந்து உய்திபெறும் வரையில் உலகம் நிலை பெற வேண்டுதலின், “தாயாகி வுலகங்களை நிலைபேறு செய் தலைவன்” (நெய்த்தானம்) என ஞானசம்பந்தர் உரைப்பர். கூடு - உடம்பு. உயிர் நீங்குங் காலத்து உறுதி நல்கும் குருதி குன்றி, மாறாய பொருள்கள் உடற்குள் நிறைந்து, யாதும் உள்ளே கொள்ளாமை புலப்படுத்தும் விக்குள் மேல் வருதலின், “விக்குள் மேல் எழவே” என்று இயம்புகின்றார். “நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்” (குறள். 335) எனத் திருவள்ளுவர் விளம்புகின்றார். காதலுற்றிருந்த உடம்பைப் பிரிய மாட்டாமையால் சாகும்போது உயிர் வாடுவது நோக்கி, “ஆவிதனை வாட்டுவிக்கும் காலம்” என்றும், அக்காலம் வந்தபின் கண்ணும் காதும் கருத்தும் செயலற்றொழிதலால் “காலம் வரும் முன்னே” என்றும் வற்புறுத்துகின்றார். “விக்குள் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்” என்று அறநூல் அறிவுறுத்துகின்றமையின், “நீ உலகை ஆட்டுவிக்கும் அம்பலத்துள் ஆட்டமதைப் பாரேனோ” என்று வடலூர் வள்ளல் தெரிவிக்கின்றார். உலகைத் தோற்றுவித்தலும் நிலைபெறுவித்தலும் ஒடுக்குதலுமாகிய மூன்றும், உயிர்களை மறைத்தலும் அருளலுமாகிய இரண்டும் ஆக ஐந்து தொழிலும் இறைவன் திருக்கூத்து என்றும், அஃது அவன் அம்பலத்துள் ஆடும் ஆட்டத்தின் அமைதியென்றும் சான்றோர் விளம்புதலால், “நீ யுலகை ஆட்டுவிக்கும் அம்பலத்துள் ஆட்டம்” என்று கூறுகின்றார். உலகு : உயிர்ப்பொருள் உயிரில் பொருள் இரண்டிற்கும் பொதுப்பெயர். “தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில், சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா, ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு” (உண். விளக். 36) என்பர் திருவதிகை மனவாசகம் கடந்தார். “ஐந்தொழிலும் என திவைகளாகும் சிருட்டி முதலான முத்தொழில் சடத்தும் அறிவிடத்து ஓரிரண்டும்” (போரூர். சந்நிதி. செங்கீரை. 4) எனச் சிதம்பர சுவாமிகள் கூறுவது காண்க. அம்பலத்திற் பார்க்கப்படும் திருக்கூத்து உயிர்களை ஊன நாடகம் ஞான நாடகம் என இரண்டினை ஆடச்செய்து, முதலதாய்ச் சிவனை நினைந்துருகிச் சிவானந்தம் பருகச் செய்வதும், இரண்டாவதாய் வையகத்து இச்சை போந்து தாக்காமல் நையச் செய்வதுமாகும்; இதனை மணிவாசகப் பெருமான், “ஊன நாடக மாடுவித்தவா வுருகி நானுனைப் பருக வைத்தவா, ஞான நாடகமாடுவித்தவா, நையவையகத்துடைய விச்சையே” (சதகம். 95) என்று தெரிவிப்பது காண்க. இச்சிறப்புடைமை பற்றியே வடலூர் வள்ளற் பெருமான், “அம்பலத்துள் ஆட்டத்தைப் பாரேனோ” என்று உரைக்கின்றார்.
இதனால், இறைவன் அம்பலத்தில் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தலின் சிறப்புணர்த்தியவாறு. (28)
|