979.

     மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
     பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
     உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
     தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.

உரை:

     பொன்னை யொத்துள்ளாய், தெய்வ மணம் கமழும் பூவை ஒத்திருக்கின்றாய் என்றாலும், உன்னை ஒப்பவர் இல்லாத ஒற்றியூர் அப்பனே, மின்னலைப்போலும் வாழ்க்கையைப் பொருளாக மதித்துத் துன்பத்துள் ஆழ்ந்து வருந்தின யான், உன்னுடைய தனக்குத்தானே ஒப்பாகிய சடையின்மேல் பொருந்திய பிறைத்திங்களைக் காணா தொழிகுவேனோ? எ.று.

     பொன்னார் மேனியனாதலால் “பொன்னொப்பாய்” என்றும், “மணவன்” (குரங்காடு) எனவும், “பூவினில் வாசம்” (ஆலவாய்) எனவும் சான்றோர் கூறுதலால், “பொன்னொப்பாய் தெய்வமணப்பூ வொப்பாய் என்னினும்” என்றும், என்றாலும் “தனக்குவமையில்லாதான்” எனப்படுவதை மேற்கொண்டு, “உன்னொப்பார் இல்லாத ஒற்றியப்பா” என்றும் இயம்புகின்றார். “ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே” (பிடித்த) என்று மாணிக்கவாசகர் உரைப்பர். மண்ணுலக வாழ்வின் நிலையாமையைக் காட்டற்கு “மின்னொப்பாம் வாழ்வு” எனவும், அதனை நிலையென எண்ணிப் பல்வகைத் துன்பத்துக் கிரையாகி வருந்தியதை, வியந்து இடருள் வீழ்ந்து அலைந்தேன் எனவும் எடுத்துரைக்கின்றார். “பொத்தை யூன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை, இத்தை மெய்யெனக் கருதி நின்றிடர்க் கடல் சுழித்தலைப் படுவேன்” (அதிசயப்) எனத் திருவாசகம் கூறுவது காண்க. தேய் பிறையாய் இடருழந்த திங்களை நிறைமதி யாமாறு சடையில் தாங்கும் பேரருள் பெற்றது காணத் தமக்கும் ஊக்கமுண்டாம் என்ற ஆர்வம் பொங்குதலால், “உன்னுடைய தன்னொப்பாம் வேணியின்மேற் சார்பிறையைப் பாரேனோ” என்று கூறுகின்றார். “முடியுடை யமரர்கள் அடிபணிந் தேத்தப் பின்னிய சடை மிசைப் பிறை நிறைவித்த பேரருளாளனார்” (கழுமலம்) என்று ஞான சம்பந்தர் சிறப்பிப்பது அறிக. உடையானுக்குரிய ஒப்பில் பெருமை உடைமைக்கு முண்டெனும் முறையால் சிவன் முடிச்சடையை “தன்னொப்பாம் வேணி” என்று புகழ்கின்றார்.

     இதனால், சிவபெருமான் சூடும் பிறையைக் காண்குறும் நலம் விழைந்தவாறு பெறப்படும்.

     (29)