98. வாய்க்கு முனதரு ளென்றே அந்தோ நாளும்
வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
நோய்க்கு முறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி
நொந்தே னின்னருள் காணேன் நுவலும் பாசத்
தேய்க்குமவன் வரிலவனுக் கியாது சொல்வேன்
என்செய்கேன் துணையறியா ஏழையேனே
தூய்க்குமர குருவே தென்தணிகை மேவும்
சோதியே யிரங்காயோ தொழும்பாளர்க்கே.
உரை: அழகிய தணிகை மலையில் எழுந்தருளும் ஞான வொளிப் பிழம்பே, தூய இளமைப் பருவத்திற் குருவாயவனே, உனது திருவருள் கிடைக்கு மென நாடோறும் எதிர்பார்த்துப் பார்த்து மனமும் உடம்பும் மெலிகின்றேன்; அடிக்கடி உடலை வருத்தும் நோய்க்கும், வாழ்க்கைத் துன்பத்துக்கும் இலக்காகி மனநிலை கலங்கி நொந்து போகின்றேனே யன்றி உன் திருவருள் எய்தப் பெற்றிலேன்; உலகவர் சொல்லும் பாசக் கயிற்றையுடைய நமன் வருவனாயின் அவனுக்குச் சொல்லுவதோ யாதேனும் செய்வதோ அறிகிலேன்; துணை யாவார் ஒருவருமில்லாத ஏழையேன் யான் அடியனாகிய என்பொருட்டு மனம் இரங்குவாயோ, உரைத்தருள்க, எ. று.
சிவ வொளியாகிய ஞானமே வுருவாகியவ னாதலால் “தணிகை மேவும் சோதியே” என முருகப் பெருமானைக் குறிக்கின்றார். இளமைப் பருவத்தன் என்று புறக்கணித்துத் துன்புற்ற பிரமன் பொருட்டு நடந்த நிகழ்ச்சி முடிவில் சிவபரம் பொருட்குக் குருவுருவில் பிரணவப் பொருளைத் தெரிவித்த செய்தியை நினைவிற் கொண்டு “குமர குருவே” என்று கூறுகிறார். அன்புடையார் வரவு நோக்குவோர், “இன்று வாராராயினும் நாளை வாரா ரல்லர்” என எதிர்பார்த்து ஏங்கி ஏமாறுவது போல முருகப் பெருமான் திருவருளை எதிர் நோக்குமாறு தோன்ற, “வாய்க்கும் உனது அருள் என்றே அந்தோ நாளும் வழிபார்த்திங்கிளைக்கின்றேன்” எனவும், ஒன்றிய நினைவாற் பெறற்குரிய திருவருட் பேற்றுக்கு இடையூறாக உண்ணும் உணவாலும் பருகும் நீராலும் உட்கொள்ளும் காற்றாலும் பிற சூழ்நிலையாலும் நோய் வந்து உடம்பைத் தாக்குதல் பற்றி, “வருத்தும் பொல்லா நோய்க்கும்” எனவும், வேண்டியன பெற மாட்டாமையால் எய்தும் மன வேதனைகளை எண்ணி, “உறு துயர்க்கும்” எனவும், இவற்றால் நன்கு தாக்குண்டு மனநிலை சிதைந்து அறிவு மயங்குவது பற்றி, “மாழ்கி நொந்தேன்” எனவும் இயம்புகின்றார். இத்துணை அல்லலுற்றும் திருவருட் செல்வத்தைப் பெறாமையால் கையறவு தோன்ற, “நின் அருள் காணேன்” என்றும், சாகும் போது நமன் போந்து அருள் பெறாத காரணம் பற்றித் தன் கைக் கயிற்றால் என் உயிரைப் பிணித்தபோது ஒன்றும் சொல்ல வியலாது யாதும் செய்யவும் இயலாமல் வருந்துவேன் என்பார், “பாசத்து ஏய்க்குமவன்வரில் அவனுக்கு யாது சொல்வேன் என்செய்கேன்” என்றும், நுண்ணறிவு கொண்டு செய்வன சூழ்ந்து துணை வேறு பெறும் திறமை யுடையவனல்லன் என்பார், “துணை யறியா ஏழையேன்” என்றும், இவற்றைத் திருவுள்ளத் தெண்ணி எனக்கு இரங்கி அருள் செய்க என வேண்டலுற்று, “இரங்காயோ தொழும்பாளர்க்கே” என்றும் கூறுகின்றார்.
இதனால் நோய்களாலும் மன வேதனைகளாலும் எய்தும் குறைகளை மொழிந்து இரங்கியருள்க என முறையிட்டவாறாம். (6)
|