980. சீலம்அற நிற்கும் சிறியார் உறவிடைநல்
காலம்அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்தம்
ஓலம்அற நஞ்சருந்தும் ஒற்றியப்பா உன்னுடைய
நீல மணிமிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ.
உரை: தேவர்கள் கடலில் எழுந்த விடத்தைக் கண்டஞ்சி ஓலமிடவே, அவர்கட்கிரங்கி அவ்விடத்தை யுண்டருளிய ஒற்றியூரப்பனே, ஒழுக்கம் கெடவுலவும் சிற்றறிவுடையோர் சூழலில் இருந்து நலம்பெற வளமந்த காலத்தை வீணிற் கழிக்கின்ற யான், உன்னுடைய நீலமணி போன்ற கழுத்தின் அழகினைப் பாராதொழிவேனோ? எ.று.
பெருமை சான்ற அறிவில்லாமையால் நல்லொழுக்கம் கெடவொழுகும் கீழ்மக்களைச் “சீலமற நிற்கும் சிறியார்” என்றும், தம்மினின்றும் நற்சீலம் நீங்கத் தாம் மாத்திரம் சீலமிலராய் நிற்றல் தோன்ற “சீலம் அறநிற்கும்” என்றும் இசைக்கின்றார். சிறியார் உறவு சிற்றினச் சேர்க்கையாய் மனநலத்தைச் சிதைப்பதை எண்ணிச் “சிறியார் உறவிடை” எனவும், நிலையிலா வாழ்வில் நிலைத்த நலங்களைச் செய்து கோடற்கென்றே காலம் தோற்றுவித்து வகுக்கப்பட்டிருத்தல் விளங்க “நற்காலம்” எனவும், அது வாய்த்தபோது நல்லனவற்றை ஈட்டிக் கொள்ளாது வீணே பயனில பேசிக் கழிக்குமாறு புலப்பட, “நற்காலமறப் பேசிக் கழிக்கின்றேன்” எனவும் இயம்புகிறார். பயனில்லாதவற்றைப் பேசிக் காலம் கழிப்பவனை “மக்களிற் பதடி” என்று திருவள்ளுவர் ஏசுவர். சிவனுடைய திருக்கழுத்து நஞ்சுண்டதால் நீலமணி போன்றதாயினும் அஃது அப்பெருமானுடைய பேரருளின் உருவாய் ஒளியும் அழகும் பெற்றிருத்தலால் அதனைப் பார்த்து மகிழ விரும்புகிறேன் என்பார், “நீலமணி மிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ” என்று விண்ணப்பிக்கின்றார். நீர்மை, நேர்மையென எழுதப்பட்டுளது.
இதனால், சிவனுடைய நீலகண்டத்தை வியந்து புகழ்ந்தவாறாம். (30)
|