981.

     சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும்
     யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன்
     ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றியப்பா உன்இதழித்
     தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ.

உரை:

     சூழவுள்ள ஊரவர் புகழும், நல்ல வளம் பொருந்திய ஒற்றியூர் அப்பனே, அடியவனும் நாயிற் கடையவனுமாகிய யான், சிறப்புமிக்க திருமால் புகழையும் தேவர்களில் முதல்வனாகிய பிரமன் புகழையும் பிறர் எவருடைய புகழையும் விரும்பாமல், உன்னுடைய கொன்றை மாலையைப் புகழ்ந்து பாராட்டும் நல்ல தொண்டரைச் சார்ந்து உன்னை அடைபவனாவேனோ? எ.று.

     ஊரவர் தத்தம் ஊரையே புகழ்வரெனினும், ஒற்றியூரை அதன் நல்வளம் கருதிப் புகழ்கின்றனரென்றற்கு “ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றியப்பா” என்று உரைக்கின்றார். “ஊரெனப் படுவது உறையூர்” என்பது போல ஒற்றியூர் புகழப்படுகிறது என்பதாம். திருவுடைமையாற் சீர்கொண்டு விளங்குதலால் “சீர்புகழும் மால்” என்றும், தேவர்களின் முதல்வனாதலால் “தேவரயன்” என்றும் சிறப்பிக்கின்றார். திருவுடைமையால் மாலும், கல்வியுடைமையால் பிரமனும் மிக்கோராதலின், இருவர் புகழையும் விதந்தோதுகின்றார். பிற விண்ணவர் புகழையும் மன்னவர் புகழையும் விரும்பாமை தோன்ற, “யார் புகழும் வேண்டேன்” என்றும், அடிமை பூண்டவனும் அடிமையினும் நாய் போன்ற கடையாய அடியனுமாய எனக்கும் என் அடிமைப் பணிக்கும் இப்புகழ்கள் தடையாமென்பார், “அடியேன் அடிநாயேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். இக் கருத்தே விளங்க, “வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன்” (உயிருண்ணி) என்று மணிவாசகப்பெருமான் உரைக்கின்றார். இதழித்தார் - கொன்றை மாலை. கொன்றைத்தார் சிவனுக்கு அடையாள மாலை யென்பர். “காமர் வண்ணமார்பில் தாரும் கொன்றை” என்பர் பாரதம் பாடிய பெருந்தேவனார். தொழும்பு - தொண்டு; ஈண்டுத் தொண்டர் மேற்று. தொண்டு செய்யும் தொழும்பரைத் தவிரச் சிவபெருமான் பிறரைத் துணையெனக் கொள்வதில்லை என்று சான்றோர் கூறுதலால், “இதழித்தார் புகழும் நற்றொழும்பு” என்றும், அவரது நற்சார்பு சிவப்பேற்றுக்கு வாயிலாதலால் “நற்றொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ” என்றும் கூறுகின்றார். “தொண்டலால் துணையுமில்லை” (ஐயாறு) என நாவுக்கரசர் உரைப்பர்.

     இதனால், நற்றொழும்பர் சார்பின் சிறப்புரைத்தவாறாம்.

     (31)