982.

     ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த
     நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி
     ஓதவள மிக்கஎழில் ஒற்றியப்பா மண்ணிடந்தும்
     மாதவன்முன் காணா மலர்அடிக்கண் வைகேனோ.

உரை:

     நெய்தல் நிலவளமிக்க அழகிய ஒற்றியூர் அப்பனே, சூரியன் பல்லை யுகுத்த ஐயனாகிய வீரப்பத்திரற்கு நல்லருள் புரிந்த நாதனே, அரனே, என்று நாத்தழும்பேற வழிபட்டு, மண்ணைக் குடைந்தகழ்ந்தும் திருமாலாற் காணப்படாத திருவடி நீழற்கண் அமர்வேனாவேனோ? எ.று.

     ஓதவளம் - கடல் வளம்; இதுவே நெய்தல் வளம் எனப்படும். ஓதம் - கடல். ஒற்றியூர் கிழக்கிற் கடற்கரையாதலின், மீன் முதலிய கடல்படு செல்வத்தாற் சிறப்புறுதலால், “ஓத வளமிக்க ஒற்றியூர்” என்று புகழ்கின்றார். மீனவர்களை, “வானம் வேண்டா வறனில் வாழ்க்கை” (அகம். 186) யுடையர் என்று சங்கச் சான்றோராகிய பரணர் கூறுவர். தக்கன் வேள்விக்குச் சென்றிருந்த தேவர்களிடையே சூரியனும் இருந்து, வீரபத்திரர் போந்து அதனை யழித்த காலை, பல் உடைபட்டு ஓடினானென்று புராணம் கூறுவதால், வீரபத்திரக் கடவுளை, “ஆதவன் றன் பல்லுகுத்த ஐயன்” என்றும், அவரைத் தக்க யாகத்திற்குச் செல்லவிட்ட போது வரம்பல தந்தருளிய செய்தியை, “ஐயற் கருள் புரிந்த நாத” என்று குறிக்கின்றார். சிவனருளால் நிகழ்ந்தமையின், இதனைச் சிவன் மேலேற்றி, “அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல் தகர்த்து” (அம்மானை) என மணிவாசகப் பெருமான் பாடுகின்றார். சிவபெருமானை நாத்தழும்பேற வாழ்த்தி வணங்கும் விருப்பத்தை “நாத அரனே என்று நாத்தழும்பு கொண்டேத்தி” என்றும், அயனொடு கூடிச் சிவனுடைய அடிமுடிகளைக் காண முயன்று, திருமால் திருவடி காண்டற் பொருட்டுப் பன்றி யுருக்கொண்டு மண்ணை ஆழ அகழ்ந்து சென்றும் காணாதயர்ந்த வரலாற்றை நினைவுற்று, “மண்ணிடந்தும் மாதவன் முன் காணா மலரடி” என்றும், அவ்வடி நீழலையடைந்து சிவானந்தத் தமர வேண்டும் எனும் வேட்கையை, “மலரடிக்கண் வைகேனோ” என்றும் உரைக்கின்றார். “காரைக்கால் அம்மையார்,” அறவா நீ ஆடும் போதுன் அடியின்கீழ் நான் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருக்க வேண்டும்” (பெரிய. பு. காரைக். 607) என்பது காண்க.

     இதனால், சிவபெருமான் திருவடி நீழலில் வைகும் வேட்கை விளம்பியவாறு.

     (32)