983. கல்லைப் புறங்கண்ட காய்மனத்துக் கைதவனேன்
தொல்லைப் பழவினையின் தோய்வகன்று வாய்ந்திடவே
ஒல்லைத் திருவருள்கொண் டொற்றியப்பா உன்னுடைய
தில்லைப் பொதுவில் திருநடனம் காணேனோ.
உரை: ஒற்றியூர் அப்பனே, வலிமைப் பண்பில் கல்லை வென்ற ஈரமற்ற மனத்தையுடைய வஞ்சகனாகிய யான் முன்னைப் பலவாய பிறவிகளில் செய்த வினைப்பயன்களில் தோய்ந்து கிடக்கும் நிலையினின்றும் நீங்கி விரைவில் ஞானம் வாய்க்கும் பொருட்டுத் திருவருளால் உன்னுடைய தில்லை மன்றில் நிகழும் திருக்கூத்துக் காண்பவனாவேனோ? எ.று.
புறம் காண்டல் - வெல்லுதல். கல்லைப் புறங்கண்ட லென்பது ஈண்டுவலிமைப் பண்பில் கல்லினும் மேம்படுதல். காய் மனம் - காய்ந்து ஈரமற்ற மனம்; அஃதாவது இரக்கமில்லாத மனம் என்பதாம். காய்ந்துலர்ந்த மனத்தின்கண் கைதவம் நிறைந்திருக்குமாறு தோன்றக் “கைதவனேன்” என்று கூறுகின்றார். கைதவன் - வஞ்சகன். தொல்லைப்பழவினை என்பதில் தொல்லை பழைய பிறவிகள் மேலும், பழவினை முன்னைப் பிறவிகளில் செய்யப்பட்டுப் பயன் நுகரப்படாதிருக்கும் வினைகளின் மேலும் நிற்கின்றன. பழவினை பயன் நுகர்தற் கேற்ற செவ்வியில் ஊழ்வினையாம் என்று அறிக. அவை உயிரைச் சூழ்ந்து கொண்டிருத்தலால், “பழவினையின் தோய்வு” எனவும், அச்சூழலிலிருந்து நீங்கினாலன்றி ஞானம் விளங்காதாகலின், “தோய்வகன்று ஞானம் வாய்ந்திட” எனவும் இயம்புகின்றார். “வினையால் அசத்து விளைவதால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” (சூ. 12. அதி. 4) என்று சிவஞான போதம் தெரிவிப்பது காண்க. இதனாற்றான், ஞானம் வருவிக்கப்பட்டது. திருவருளாலன்றி வினைத்தொடர்பு அறாமையின், “திருவருள் கொண்டு” என்று குறிக்கின்றார். “அருளே யுலகெல்லாம் ஆள்விப்ப தீசன், அருளே பிறப்பறுப்பதானால்--அருளாலே, மெய்ப் பொருளை நோக்கும் விழியுடையேன்” (அற்புதத்) என்று காரைக்காலம்மையார் கூறுகின்றார். தில்லையம்பலத்துத் திருநடம் கண்டு உலகம் சிறந்த இன்பத்தில் மூழ்கித் திளைப்பதுபற்றி, அதனைக் காண்டலில் ஆர்வம் மிகுந்து, “தில்லைப் பொதுவில் உன்னுடைய திருநடனம் காண்பேனோ?” என்று கூறுகிறார். “தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்னத்தன் ஆடல்கண் டின்புற்றதால் இவ்விரு நிலமே” (கோயில்.விருத்) என்று திருநாவுக்கரசர் உரைப்பது ஈண்டு நோக்கத்தக்கது.
இதனால், தில்லையம்பலத்தில் சிவபெருமான் நிகழ்த்தும் திருநடனத்தின் காட்சி நலம் விதந்தோதியவாறாம். (33)
|