984. கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச
நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணையேன் துன்பொழிய
உடையவனே உலகேத்தும் ஒற்றிஅப்பா நின்பால்வந்
தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.
உரை: எல்லா முடைய பெருமானே, உலகம் புகழும் ஒற்றியூரப்பனே, கீழ்மகனும் கல்போன்ற மனமுடையவனும் பொய்யனும் வஞ்சகமான செயலுடையவனும் நாணமில்லாதவனும் நாய்க்கு ஒப்பவனுமாகிய என்னுடைய துன்பம் கெடும்படியாக நின்னிடம் வந்து, நீயே அடைவாக நின்று உடல் குளிர்ந்து சிவானந்தத்தைக் கூடுபவனாவேனோ? எ.று.
உலகனைத்தையும் உடைமையாகவும் உயிர் அனைத்தையும் அடிமையாகவும் உடையனாதலின் “உடையவனே” என்றும், உலகவர் புகழும் சிறப்புடைமை பற்றி “உலகேத்தும் ஒற்றியப்பா” என்றும் பரவுகின்றார். கடையாயவர் செய்வன செய்பவன் என்பார் “கடையவன்” எனவும், நெஞ்சில் இரக்கப்பண்பு இல்லாமை கண்டு “கன்மனத்தேன்” எனவும், சொல்லினும் செயலிலும் பொய்ம்மையுடைய னென்றற்குக் “கைதவன்” எனவும், பிறரை வஞ்சித் தொழுகுவதாக எண்ணி, “வஞ்ச நடையவனேன்” எனவும், இத்தவறுகளைக் காணும்போது நாணம் தோன்றாமை தோன்ற, “நாணிலியேன்” எனவும், தன் இனத்தாரிடத்தும் அன்பின்றிக் காய்ந்து வெருட்டும் இயல்புபற்றி “நாய்க்கிணையேன்” எனவும் இகழ்கின்றார். இவ்விழி நிலையால் எய்தும் துன்பத்துக்குக் காரணம் மனத்தில் நிறைந்த மருள் விளைவிக்கும் உள்ளக் கொதிப்பாதலால், அதனைப் போக்குதற்கு மாற்று மருந்து சிவன்பால் அடைந்து தெருளுற்று உள்ளமும் உடலும் குளிர்ந்து இன்புறுதலாதலால், “நின்பால் வந்து அடைய நின்று மெய் குளிர்ந்து ஆனந்தம் கூடேனோ” என இயம்புகின்றார்.
இதனால், இறைவன் திருவடியையே அடைவாகப் புகுந்து ஆனந்தம் பெறும் திறம் கூறியவாறு. (34)
|