985.

     வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில்
     பேதை எனவீழ்ந்தே பிணிஉழந்த பேயடியேன்
     ஓதை கடற்கரைவாய் ஒற்றியப்பா வாழ்த்துகின்றோர்
     தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ.

உரை:

     அலை முழக்கத்தையுடைய கடலின் கரையிலுள்ள ஒற்றியூர் அப்பனே, துன்பத்துக் கேதுவாகிய காம மயக்கத்தை யுண்டுபண்ணும் இளமங்கையரது மலஞ்சொரியும் அல்குற் குழியில் அறிவிலார் போல வீழ்ந்து நோயுற்று வருந்திய பேய்த்தன்மையை யுடைய அடியேன், தன்னை வாழ்த்தி வணங்கும் அடியார்கட்குற்ற தீங்கினைப் போக்கும் உனது சீரிய திருவருளைப் பெறுபவனாவனோ? எ.று.

     ஓதை - முழக்கம்; ஈண்டு அலைகள் மலைபோ லெழுந்து வீழ்ந்து கரையொடு மோதுவதால் உண்டாகும் பேரிரைச்சல், காம வுணர்ச்சியைத் தூண்டி ஆடவர் மனத்தை மயக்கும் இளமை கனிந்த மங்கையரை “வாதை மயல் காட்டும் மடவார்” என்றும், புணர்ச்சி எய்துதற்கண் அவர்பால் நோயுண்மை நோக்கும் அறிவின்றி ஒழுகுதலால் “மலக்குழியிற் பேதையென வீழ்ந்து” என்றும், அதனால் நோயுற்று வருந்தினமை தோன்ற, “பிணியுழந்த பேய் அடியேன்” என்றும் கூறுகின்றார். மடவார் - இளமங்கையர். அவர்களுடைய உருவும் சொல்லும் செயலும் காணும் ஆடவர் மனத்தைக் கலக்கிக் காமத்துறையில் செலுத்துவதால் “மயல் மடவார்” எனக் குறிக்கின்றார். மல நீரும் வழும்பும் சொரிதலால் நிதம்பவுறுப்பை, “மலக்குழி” என்று இழிக்கின்றார். ஊதியமின்றி ஏதமே பெறுவதால் “பேதை”யை உவமம் செய்கின்றார். நுகர மாட்டாதாயினும் ஆசை வடிவாய் அலைவது பேயாதலால், நுகரமாட்டா முதுமைக் காலத்தும் ஆசை யறாமை புலப்படப் “பேயடியேன்” என்று உரைக்கின்றார். “தளையவிழ் கோதை நல்லார் தங்களோடின்பம் எய்த இளையனுமல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றி னேனே” (தனி. நேரிசை) எனத் திருநாவுக்கரசர் தெரிய விளம்புவது காண்க. வாழ்த்தி வழிபடுவார்க்கு மன முதலிய கருவிகள் நெறி பிறழ்ந்து தீதிற் புகாமற் காப்பது திருவருளாதலால், அதனை “வாழ்த்துகின்றோர் தீதையகற்று முன்றன் சீர் அருளைச் சேரேனோ” என்று உரைக்கின்றார். “தம்மடி பரவுவார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார்” (மறைக்) என அப்பரடிகள் அறிவித்தருளுவது காண்க.

     இதனால், வழிபடுவார்க்குத் தீதகற்றிச் செம்மை நெறி காட்டும் திருவருளின் சிறப்புரைத்தவாறு.

     (35)