986.

     பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
     வெய்யற் கிறுமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
     உய்யற் கருள்செய்யும் ஒற்றியப்பா உன்அடிசேர்
     மெய்யர்க் கடிமைசெய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ.

உரை:

     உலக வாழ்க்கைத் துன்பத்தினின்றும் உய்தி பெறற் பொருட்டு அருள் புரியும் ஒற்றியூர் அப்பனே, பொய் யொழுக்க முடையார்க்கு வேண்டுவன வுதவும் புல்லியனாகிய யான் வெம்மை மிகும் வெயிலிற் பட்ட புழுப்போல் உடல் சோர்ந்து மெலிந்து வருந்தினேனாதலால், உன் திருவடியே சிந்திக்கும் மெய்த்தொண்டர்க்கு அடிப்பணி புரிந்து உன்னுடைய மென்மை பொருந்திய மலர் போன்ற திருவடியை அடைபவனாவனோ? எ.று.

     உலக வாழ்க்கையில் மக்களுயிர் இயற்கை மலமறைப்பாலும் மாயேயம் செய்யும் மயக்கத்தாலும் முக்குண வயத்தாலும் குற்றங்கள் செய்து பிறவித் துன்பத்துக் குள்ளாதலால், மெய்யுணர்வுடையோர் உய்தற் பொருட்டு “அறிவினுள் அருளால் மன்னி” நன்னெறி காட்டுகின்றா னெனச் சான்றோர் கூறுதலால், “உய்யற் கருள் செய்யும் ஒற்றியப்பா” என்று உரைக்கின்றார். “படுவன பலவும் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை” (தனி. நேரிசை) என்று நாவுக்கரசரும், “அறி நீர்மையில் எய்தும் மவர்க்கறியும் அறிவருளிக் குறிநீர்மையர்” (இடும்பா) என்று ஞானசம்பந்தரும் அறிவிப்பது காண்க. பொய்யர் கூறுவனவற்றின் பொய்ம்மை யுணரும் திறமின்மை தோன்றப், “பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன்” எனவும், மிக்க வெயிலை “வன்மை செய்யும் வெய்யல்” எனவும் கூறுகின்றார். வெயிலிற் பட்ட புழு மெய் சோர்ந்து வருந்துமென்பதை “என்பிலதனை வெயில் போலக் காயுமே” (குறள்) எனப் பெரியோர் கூறுவதனாலும் அறியலாம். ‘வன்மை செய்யும்’ என்பதைப் பொய்யர்க் கேற்றினும் அமையும், வெயில் வெய்யில் என்றாகி வெய்யல் என வழக்கில் வந்துள்ளது. கட்புலனாகும் புழுக்களைக் கிறுமி எனவும், கட்புலனாகாதவற்றைக் கிறிமி எனவும் கூறுவர். கிறி - நோய். அடிசேர் மெய்யராவார், “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு” சிவஞானிகள்; அவர்கள் மெய்ஞ்ஞானிகளாய்ச் சிவனென்றே மதித்துப் போற்றப்படுவதால், அவர்க்குச் செய்யும் தொண்டு சிவபிரானுக்காகிச் சிவப்பேறு விளைவித்தலால், “உன்னடிசேர் மெய்யர்க்கு அடிமை செய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ” என்று பராவுகின்றார்.

     இதனால், மெய்த்தொண்டர்க்குச் செய்யும் அடிமைப்பணி சிவப்பேறு எய்துவிக்கும் என்பதாம்.

     (36)