37. நற்றுணை விளக்கம்

    நவச்சிவாயம் என்ற திருவருட் பெயரின்கண் தமக்கிருக்கும் கடைப்பிடி நிலையை “நமச்சிவாயத்தை நான் மறவேன்” என்ற மகுடமிட்டு வழங்கியருளிய திருப்பதிகத்திற் கண்டோம். நற்றுணை விளக்கம் என்ற இத் திருப்பதியத்தின் வாயிலாக அத்திருப்பெயர்பால் தமக்குளதாய மனவுறைப்புக்குரிய காரணத்தை வடலூர் வள்ளல் விரித்து விளக்குகின்றார். அதனால், இப்பதிகம் நற்றுணை விளக்கம் எனக் குறிக்கப் பெறுகின்றது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

987.

     எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
          இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
     அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
          அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
     விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
          விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
     நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
          நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

உரை:

     கெட வேண்டிய ஐம்புலன்களின் மேற் செல்கின்ற ஆசையாகிய பகையால் துன்புற்று மெலிந்தாய் எனினும், என் நெஞ்சமே, இனி நீ அஞ்சுதற்கு ஒரு பொருளும் இல்லை. அச்சமே உனக்கு இனி வேண்டா; வேதங்கள் நான்கினும் வன்மையுற்று மேம்பட வேண்டியும், பிரமனும் திருமாலும் தத்தம் வகையில் மேன்மைபெற வேண்டியும் கழுத்தின்கண் நஞ்சினை அமுதாக உண்டு நிறுத்திய நாதனாகிய சிவபெருமானுடைய திருப்பெயராகிய நமச்சிவாயம் என்பது, நாம் பெறுதற்கமைந்த துணையாக வுளது, காண், எ.று.

     “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி” என்பர் திருவள்ளுவர். எனவே நெஞ்சினும் மிக்க துணை வேறின்மை கண்டபின், அதனைக் கோடலே சீரிதென்பது தெளிவாகிறது. இத் தெளிவின்கண் நெஞ்சினுக்குத் துன்பமும் துயரும் போந்து அதன் வலியைக் குறைத்து ஆற்றலைச் சுருக்குதற்குக் காரணம் யாதாம் என்று எண்ணுவார்க்குக் கண் காது முதலிய பொறி வாயிலாக உளவாகும் ஐம்புலவாசைகள் என்பது இனிதுணரப்படுகிறது; சான்றோர்கள் ஆங்காங்கு அவ்வப்போது வழங்கியுள்ள அறிவுரைகளும் இதனைத் தெளியக் காட்டியுள்ளன. இவ்வாற்றால் நெஞ்சுற்ற நோய்க்கும் மெலிவுக்கும் காரணம் ஐம்புலப் பகை காரணமாதல் விளங்கினமையின், “எஞ்சவேண்டிய ஐம்புலப் பகையால் இடர்கொண் டோய்ந்தனை” என்று வள்ளற் பெருமான் உரைக்கின்றார். துன்புறுத்தி மெலிவிக்கும் புலப்பகை வெலற்கரிய தொன்றன்று என்பது தோன்ற, “எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகை” என்று குறிக்கின்றார். எஞ்சுதல், ஈண்டுக் கெடுதல் மேற்று. எழுச்சிக்கு மாறாய எண்ணங்களை எழுப்பி வலியைச் சுருக்கும் நினைவு வகையை, “இடர்” என உரைக்கின்றார். “இடர் பாவம் எனமிக்க துக்க வேட்கை வெறுப்பே வென்றனைவீரும் உலகையோடிக் குடைகின்றீர்” என்று நாவரசர் உரைப்பது காண்க. இடரும் தளர்ச்சியும் தன்மையிற் சிறியவாயினும் மனத்தின் பெருமையையும் திண்மையையும் கெடச் சுருக்கிச் சிறுகச் செய்தலின், “நெஞ்சே இடர் கொண்டு ஓய்ந்தனை” என்று குறித்துரைக்கின்றார். ஓய்தல், ஆய்தல் என்ற சொற்கள் உள்ளதன் சுருக்க நிலையை யுணர்த்துவன என்று தொல்காப்பியர் கூறுகின்றார். ஒடுங்கி ஓய்ந்தனை யாயினும் உய்தியில்லை யென்று உயங்குவதோ உள்ளத்தால் அஞ்சுவதோ வேண்டா என்று தெருட்டுவாராய், “இனி நீ அஞ்சவேண்டிய தென்னை, “அஞ்சல் அஞ்சல் காண்” என அறிவுறுத்துகின்றார். சைவத்தின் மிக்க சமயமும் அதனைச் சார்ந்த சிவத்தின் மிக்க செம்பொருளும் துணிந்து காட்டும் தெளிவும் வன்மையும் இல்லாதனவாயினும் பழமை நோக்கி நான்கு மறைகளும் மேம்படுதல் வேண்டும் என்றும், படைக்கும் தொழிலவனாகிய பிரமனும் காக்கும் முறையினனாகிய திருமாலும் தத்தம் தொழில் நலத்தால் விளக்கமுற வேண்டியும், கடலிடத் தெழுந்த நஞ்சினை அமுதாகச் சிவமுதல்வனாகிய நாதன் உண்டான் என்பாராய், “அருமறை நான்கும் விஞ்சவேண்டியும், மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா நஞ்சை வேண்டிய நாதன்” என மொழிந்தருள்கின்றார். “எழுதப்படாத அருமையுடைமைபற்றி மறையை, “அருமறை” என்று சிறப்பிக்கின்றார். எழுதிய நூல்களே எண்ணிறந்தன இறந்து பட்டமையின், எழுதா மறையாகிய இவை நான்கும் நிலைபெறல் வேண்டி நஞ்சுண்டார் என்பாராய் “அருமறை நான்கும் விஞ்சவேண்டி” என்றார் என்றுமாம். மாலவன் - திருமாலாகிய அவன். தொழில் முறையில் மலரோனை முன்னும் மாலவனைப் பின்னும் உரைத்தல் முறையாயினும், வேதத்தைக் காப்பவனும், மலரோனுக்குத் தந்தையுமாதலால் மாலவனை மலரவற்கு முன் வைத்து மொழிகின்றார். விரும்பியுண்டமை புலப்பட “அமுதா நஞ்சை வேண்டிய நாதன்” என்றும், வேதமும் வேதியனும் அவன் தந்தையாகிய திருமாலும் அவனாற் காக்கப்படும் உலகமும் யாவும் சிவபெருமானது அருட்செயலை மறவாது நினைந்து பரவுதற் பொருட்டு மிடற்றின்கண் அமைத்துக் கொண்டமை இனிது விளங்க “மிடற்றின்கண்” என்றும் எடுத்துரைக்கின்றார், இங்ஙனம் நஞ்சுண்டு உலகுயிர்களை உய்வித்தமுதல்வன் திருப்பெயர்கள் ஆயிரம் ஆயிரம் எனினும், “நமச்சிவாயம்” என்பது நமக்குத் துணையாகும் சிறப்பு வாய்ந்தது; துணையாக நாம் பெறுதற்கேற்ற எளிமையும் பெருமையும் நிறைந்தது என்பாராய், “நாதன் தன்நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே” என்று உரைக்கின்றார்.

     இதன்கண், நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணை என்று நற்றுணையாம் சிறப்பும், வேதங்களும் திருமாலும் பிரமனும் உய்தி பெற நஞ்சுண்டு காத்த நாதன் திருநாமம் என விளக்கமும் உரைக்குமாறு காண்க. சிவபுராணத்தின்கண் திருவாதவூரடிகள் “நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க” என்று எடுத்தோதிய திருக்குறிப்பையும் நினைவு கூர்க.

     (1)