988.

     காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
          கணைகள் ஏவினும் காலனே வரினும்
     பூவின் மன்னவன் சீறினும் திருமால்
          போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
     ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
          ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
     நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
          நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே

உரை:

     கற்பகச் சோலைக்குரிய வேந்தனான இந்திரன் எதிர்த்தானாயினும், மதன் தன் மலரம்புகளை எய்தானாயினும், நமனே கடா ஏறி வந்தானாயினும், தாமரைப் பூமேல் இருக்கும் பிரமனே வெகுண்டு வந்தானாயினும், திருமாலே போர் குறித்து வந்தானாயினும், நெஞ்சமே, இவர்கள் செயல்கள் ஒரு பொருளாகா; கெடாத பெரிய துயரத்தை மனத்தின்கண் நீ ஏன் கொண்டனை; நீ சிறிதும் அஞ்சுதல் வேண்டா; துன்பம் அனைத்தையும் துடைக்கும் உளவை நீ அறியாதிருக்கின்றாயே; திருநாவுக்கரசரைக் கடலிலிருந்து கரையிற் கொணர்ந்து சேர்த்த நமச்சிவாயம் என்ற திருப்பெயர் காண், நாம் பெறுவதாகிய துணை. எ.று.

     கற்பகச் சோலையை யுடையவன் இந்திரன் என்பது புராணச் செய்தி. அதனால் இந்திரனை “காவின் மன்னவன்” என்று குறிக்கின்றார். மண்ணுலகத்து மன்னருள் யாகம் நூறு செய்பவர் இந்திரனாவர் என்பது ஒரு முறை; மண்ணக வேந்தர் எவரேனும் அவ்வாறு யாகம் செய்து இந்திரனாக முயன்றால் இந்திரன் அவர்களது முயற்சியைக் கெடுப்பது கருதிப் போர் தொடுப்பான். அதனைக் கருத்திற் கொண்டே வள்ளற் பெருமான், காவின் மன்னவன் எதிர்க்கினும்,” என்று கூறுகின்றார். ஆணும் பெண்ணுமாய் உலகில் கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து அன்பும் அறமும் கொண்டு வாழ்வாங்கு வாழ்வாராயின் தேவராவர் என்பது அறநூல் துணிவு. அவரது ஒருமை யுணர்வைக் கெடுத்துக் காமவிச்சையை மிகுவித்து நெறிபிறழச் செய்தல்வேண்டிக் காமவேள் காலம் நோக்காது கணை எய்து இருதிறத்தார் கருத்தையும் அலைப்பன்; அதனை நினைவுறுத்தற்கே “காமன் கணைகள் ஏவினும்” என்று கூறுகின்றார். ஆன்றவிந்தடங்கிய சான்றோராயினும் மகளிரொடு சொல்லாடு மளவிற் பயில்வராயினும் மனம் சிதைக்கின்றார்கள்; “பகர்ச்சி மடவார் பயில நோன்பாற்றல் திகழ்ச்சி தரும் நெஞ்சத் திட்பம்” என்று சிவப்பிரகாச முனிவர் தெரிவிக்கின்றார். உலகில் மக்கட்கு இறப்பென்பது எந்த நேரத்திலும் உண்டாதலால் “காலனே வரினும்” என்று இயம்புகின்றார். தவம் மிகுதியால் பரமபதம் பெறுவாரை வெகுண்டு போர் தொடுப்பது பிரமனுக்கு இயல்பென்றற்குப் “பூவின் மன்னவன் சீறினும்” எனவும், இவ்வாறே பதப்பேறடைவாரைப் பொறாது மறுத்துப் போர் உடற்றுவதில் திருமாலும் விலக்கவல்லர் என்றற்குத் “திருமால் போர்க்கு நேரினும்” என்றும், இவை யாவும் உறுதிப் பொருள் நோக்கிச் செய்வன வன்மையின் இகழ்ந்து “பொருளல நெஞ்சே” என்றும் புகல்கின்றார். கெடுவதில்லாத பெருந்துயர் எய்தியது போன்று எண்ணி நெஞ்சம் திண்மையிழந்து சிதைவது நன்றன்மையால் “ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்” என்று நெஞ்சினை வினவுகின்றார். நெருப்பிற் காய்ச்சுதலால் பொன் மாசு நீங்கி ஒளிர்வது போலத் துன்பங்கள் தாக்குதலால் உயிரும் மனமும் மாசு நீங்கி ஞானவொளி மிகும் என்பர், நீ எய்தும் துயர் அன்னவல்ல என்பாராய், “மாதுயர் எற்றினுக் கடைந்தாய்” என்று கேட்கின்றார். இப்பொழுது உண்மைத் தெரிந்து விட்டமையின் அஞ்சற்க என்பார், “ஒன்றும் அஞ்சல்” என்றும், எத்தகைய துன்பங்கள் தொடர்ந்து வரினும் துடைத்தழித்தற்கு ஓர் உளவு உண்டே; நீ அதனை அறிந்திலை போலும் என்பாராய், “உளவு அறிந்திலையே” என வினவுகின்றார். உளவு என்னும் தமிழ்ச்சொல்லை விடுத்து இந்நாளைய தமிழர் பலர் உபாயம் என்ற சொல்லை வழங்குகின்றார்கள்; அச்செயல் தாயிருக்க மணைவெந் நீராட்டும் தகவின்மை என்பதை அவர் அறிந்திலர். நாவின் மன்னர் - திருநாவுக்கரசர். சமண் செல்வர் அவரைக் கல்லொடு பிணித்துக் கடலில் இட்டபோது அவர், நமச்சிவாயம் என்ற திருப்பெயரையே உறுதுணையாக உள்ளத்திற் கொண்டு ஓதிக் கரையேறினார் என்பது வரலாறு; “கல்லினோ டெனைப்பூட்டி யமண்கையர், ஒல்லை நீர்ப்புக நூக்க என் வாக்கினால், நெல்லு நீள்வயல் நீலக் குடியரன், நல்ல நாமம் நவிற்றியுய்ந்தேனரோ” என்றும், “கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே” என்றும் ஓதியிருப்பது நினைவிற் கொள்க என்பாராய், “நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே” என்று உரைத்தருள்கின்றார்.

     இதன்கண், நற்றுணையாவது நமச்சிவாயம் என்றும், நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்தது அதற்கு விளக்கமென்றும் தெளிவித்தவாறு.

     (2)