989.

     நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
          நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
     வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
          வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான்
     கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
          கொடிய காமனைக் கொளுவிய நுதல்தீ
     நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
          நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே

உரை:

     நெடிய வஞ்சகமுடைய மகளிரின் நீண்ட கண்களாகிய வேல் தாக்குதலால் நிலை கலங்கி வாடி வருந்துகின்றாய்; நெஞ்சமே, இனி நீ அஞ்சுதல் ஒழிக; வாழ்க; மலரம்புகளை எய்தற்பொருட்டு நெறி தவறிய நிலைமைக்கண் நின்ற கொடிய காமதேவனை எரித்த, நெற்றியில் நெருப்பைக் காலும் கண்ணையுடைய ஒப்பற்ற நாதனாகிய சிவபிரானது திருநாமமாகிய நமச்சிவாயம், நாம் பெறுதற் கமைந்த துணையாம். எ.று.

     பன்னாள் நின்று வருத்தும் வஞ்சகம் என்றற்கு “நீட்டமுற்றதோர் வஞ்சகம்” என்றும், அதனைப் புரிவதை இயல்பாகவுடைய பொருட் பெண்டிரை “வஞ்சக மடவார்” என்றும், அவர்களுடைய கட்பார்வையின் கொடுமையைப் புலப்படுத்தற்கு “நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி வாட்டம் உற்றனை” என்றும் இயம்புகின்றார். கலங்கிய நெஞ்சினைக் கொண்டே நமச்சிவாயம் என்ற நற்றுணையைப் பெற வேண்டியிருத்தலின், “வாழி நெஞ்சமே” என்று தெருட்டுகின்றார். நெறிதிறம்பிய செயலினனானது பற்றிக் “கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமன்” என்று கூறுகின்றார். நுதல் நாட்டம் என்பதே யமையுமாயினும், சொல்லில் வழியது உய்த்துணர்வு என்ற முறைபற்றி, “நுதல் தீநாட்டம்” என்று தெரிவிக்கின்றார்.

     இதன்கண், நமச்சிவாயம் நற்றுணை என்பதும் காமனைக் காய்ந்தது விளக்க மென்பதும் அறிக.

     (3)