99. ஆளாயோ துயரளக்கர் வீழ்ந்து மாழ்கி
ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
கேளாயோ என்செய்கே னெந்தாய் அன்பர்
கிளத்து முனதரு ளெனக்குக் கிடையாதாகில்
நாளாயோர் நடுவன் வரின் என் செய்வானோ
நாயினேன் என்சொல்வேன் நாணுவேனோ
தோளாவோர் மணியே தென் தணிகை மேவும்
சுடரே யென்னறிவே சிற்சுகங்கொள் வாழ்வே.
உரை: அழகிய தணிகை மலையில் எழுந்தருளும் ஞானச் சுடராகியவனே, அறிவுருவே, அறிவாற் பெறலாகும் நலமிக்க வாழ் முதலே, துளைக்கப்படாத ஒப்பற்ற மணி போல்பவனே, அடியேனை நீ ஆட்கொள்ள மாட்டாயோ, துயரமாகிய கடலில் வீழ்ந்து மயங்கி ஐயாவோ என்று முறையிடும் என் முறையீட்டைச் செவியில் சிறிதும் கொள்ளமாட்டாயோ, எளியனாகிய யான் என்ன செய்வேன்; எந்தையே, அன்புடையார் எடுத்துரைக்கும் உனது திருவருள் எனக்குக் கிடைக்காவிடில் சாகும் நாளில் எமன் வரும் போது அவன் என்னை என்ன செய்வானோ, உனது திருவருள் எய்தாமைக்குக் காரணம் கேட்பானாயின் யான் யாது சொல்வேன்; ஒன்றும் சொல்ல மாட்டாமல் வெட்கித் தலை குனிவேனோ, தெரிந்திலேன், எ. று.
தீயின் செஞ்சுடர் போலும் மேனியனாவது தோன்றச் “சுடரே” என்ற சொல் நிற்கிறது. “அத்தர் வண்ணம் அழலும் அழல்வண்ணம்” (கருகாவூர்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. இருள் நீக்கும் இயைபு நோக்கி “ஞானச் சுடராகியவனே” என உரை கூறிற்று. உயிரறிவினுள் இருந்து அறிவருளுதலால் “அறிவே” என்கின்றார். அறம் பொருள்களால் எய்தும் சுகங்களினும் அறிவாற் பெறுவது நிலை பேறுடையதாகலின், “சிற்சுகம் கொள் வாழ்வே” எனச் சிறப்பிக்கின்றார். சிற்சுகம்-ஞானத்தால் எய்தும் சுகம். அறிவானவர்க்கும் அறியாமை நின்ற பெருமானாதலால் இங்ஙனம் கூறுகிறார். உலகியல் மணிகள் திளைத்துக் கடைந்து கொள்ளப் படுதலால், முருகனாகிய மாணிக்க மணியைத் “தோளாவோர் மணியே” எனக் குறிக்கின்றார். முத்தும் மணி வகையுள் ஒன்றாதலால், தோளா முத்தெனற்குத் தோளா மணி யென்றார் என்பதுமுண்டு. ஆட்கொண்ட விடத்து, ஆட்பட்டவர் நலந்தீங்குகள் யாவும் ஆண்டவரைச் சேர்தலின், “ஆளாயோ” எனச் சொல்கிறார். வாழ்வு நல்கும் பெருகிய துன்பத்தால் மன மயங்கி அறிவு அலமந்து முறையிடும் தனது முறையீட்டுக்கு விடை எய்தாமையால் “துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ ஏனும் முறையை அந்தோ சற்றும் கேளாயோ” என இயம்புகிறார். ஆளாயோ கேளாயோ என்பன முறையீடுகள். கேட்டலும் ஆட்கொளலும் செய்யாவிடில் என் செய்வாய் என்பார்க்குச் செயலற்றுக் கெடுவேன் என்பார், “என் செய்கேன் எந்தாய்” என வருந்துகிறார். கிளத்தல்-எடுத்துரைத்தல்; ஈண்டுப் புகழ்தல் மேற்று. இம் முறையீடு ஏற்கப் பெறாவிடின் திருவருட் பேறு இல்லையாம். அருள் பேற்றுக் கென்று வாழப் பிறந்த உயிர் அதனைப் பெறா தொழியின், உயிர் கவர வரும் இயமன், உயிரைக் கொள்ளுங்கால், திருவருளைப் பெறாமை ஏன் என வினவுவன்; ஒன்றும் சொல்ல மாட்டாது நாணி வருந்துவேன் என்பார், “உனதருள் எனக்குக் கிடையாதாகில் நாளாயோர் நடுவன் வரில் என்செய்வானோ நாயினேன் என்சொல்வேன் நாணுவேனோ” என உரைக்கின்றார்.
இதன்கண், திருவருட் பேற்றுக் கென்று மண்ணில் வாழப் பிறந்த யான் அதனைப் பெறாவிடில் நாளை உயிர் கவரும் நமனுக்கு விடை கூற வேண்டும் என முறையிடுதல் காண்க. (7)
|